சென்னை
தமிழகத்தில் கொரோனவின் தாக்கம் குறைந்ததாகத் தெரியவில்லை. சனிக்கிழமை 66 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 38 பேர் ஆண்கள். 28 பேர் பெண்கள். இதையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,821 ஆக அதிகரித்துள்ளது ஒருவர் உயிரிழந்துள்ளார். பலியானவர் சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த 34 வயது இளைஞர். இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 36 ஆக இருந்த ஆய்வகங்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் தொற்று பாதிப்பட்டோர் 835 பேர் உள்ளனர். இவர்களில் 49 பேர் பத்து வயதிற்குட்பட்டவர்கள்.
சனிக்கிழமை 7,707 பேரின் சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 80,110 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளது. வீட்டுக் கண்காணிப்பில் 25,503 பேர் உள்ளனர். சனிக்கிழமை 94 பேர் வீடு திரும்பியுள்ளனர். வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 960 ஆக உள்ளது. சனிக்கிழமை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அதிகபட்சமாக சென்னையில் 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் ஏழு பேரும், தென்காசியில் ஐந்து பேரும் மதுரையில் நான்கு பேரும், பெரம்பலூர், விருதுநகரில் தலா இரண்டு பேரும், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலையில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகரில் பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் அருப்புக்கோட்டையை அடுத்துள்ள செட்டிகுறிச்சியைச் சேர்ந்த 45 வயது ஆண், மற்றொருர் விருதுநகர் அருகே உள்ள குமாரபுத்தை சேர்ந்த 26 வயது ஆண்.
மதுரையில் தொற்று பாதிக்கப்பட்டுள்ள நான்கு பேரும் 47, 51, 38, 21 வயது மதிக்கத்தக்க ஆண்கள். கொரோனா சிகிச்சையில் தமிழகம் முன்னோடியாக இருப்பதாகவும், அனைத்து வசதிகளும் மருத்துவமனைகளில் உள்ளதாகவும் வழக்கம் போல் கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா தொற்று பாதிப்பு நிலைகளைக் கண்டறிய தமிழகத்திற்கு இரண்டு குழுக்கள் வந்துள்ளன என்றார். மத்தியக்குழு மருத்துவமனைகளை ஆய்வு செய்து பாராட்டியதாகக் கூறினார்.