சென்னை:
கிராமப்புறங்களில் கொரோனா தொற்று பரவி வருவதால் நோய்த் தடுப்புப்பணிக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் என்று சட்டமன்றஉறுப்பினர்கள் ஆலோசனைக்குழு கூட்டத்தில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்துசென்னை தலைமைச் செயலகத்தில் சட்டமன்றஉறுப்பினர்கள் ஆலோசனைக் குழு கூட்டம் முதலமைச்சர் தலைமையில் சனிக்கிழமையன்று (மே 22) நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சட்டமன்றக்குழு தலைவர் நாகை மாலி பங்கேற்று, ஆலோசனைகளை முன்வைத்தார்.
மாநில அரசுக்கு அவர் முன்வைத்த ஆலோசனைகள் வருமாறு:
அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்ட அளவைவிட நோயாளிகள் வருகையால் செவிலியர், மருத்துவர், பணியாளர்களின் வேலை பளு அதிகம் உள்ளது. இதனை குறைக்கும் விதமாக மருத்துவம் சாராத பணிகளான நோயாளிகளின் பதிவு, ஆன்லைன் பதிவு, விசாரணை தகவல், பரிசோதனை முடிவுகள் பெறுதல்உள்ளிட்ட பணிகளை ஆசிரியர்கள், தன்னார்வலர்களைப் பயன்படுத்தி செய்யலாம்.
கிராமங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம்
கொரோனா நோய் மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ள குறிப்பாக கிராமப்புறங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும். நோய் தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கையைப் பொறுத்து தேவையான அளவுக்கு ஒன்றிய அளவில் பராமரிப்பு மையங்களை அமைக்க வேண்டும். கொரோனா நோய்த்தடுப்பு பணிகளுக்கு உள் ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும்.
வாட்ஸ் அப் குழு
கிராமப்புறங்களில் தொற்று அதிகமாக பரவிக் கொண்டிருக்கிறது. நகரங்களில் உள்ளகட்டமைப்பு வசதிகள் கிராமங்களில் கிடையாது.எனவே, ஒவ்வொரு ஊராட்சி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், மன்ற உறுப்பினர்கள், செயலாளர், கிராம நிர்வாக அலுவலர் கொண்ட ‘வாட்ஸ் அப்’ குழு உருவாக்கப்பட வேண்டும். இந்த குழுவினருக்கு பல்ஸ் மீட்டர், தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்ட மிக அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும்.குடியிருப்பு பகுதிகளில் யாருக்காவது நோய்தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தாலோ அல்லது நோய் உறுதி செய்யப்பட்டாலோ தனிமைப்படுத்தப் பட்டாலும் குணமடைய மாத்திரைகள் வழங்க உள்ளூர் ஆசிரியர்கள், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை பயன்படுத்தலாம்.
சத்துணவு மையங்களில் சமையல்
வைரஸ் பாதிப்பால் கிராமப்புறங்களில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களின் பசியைப் போக்க சத்துணவு மையங்களில் சமைத்து உணவு கொடுக்கலாம். இந்த இக்கட்டான நேரத்தில் உதவி செய்ய தன்னார்வலர்கள் முன் வரலாம் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்துஉணவு சமைத்து வழங்க அனுமதி வழங்கலாம்.இதனை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கண்காணிக்க உத்தரவிடலாம்.
என்எஸ்எஸ்-என்சிசி மாணவர்களை ஈடுபடுத்தலாம்
தடுப்பூசி தயாரிப்புக்கு உலகளாவிய ஒப் பந்தத்தை முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதால் தடுப்பூசி கிடைத்ததும் ‘பல்ஸ் போலியோ’ இயக்கம் போல் ஒரே வாரத்தில் அனைவருக்கும் தடுப்பூசி வழங்க திட்டமிடலாம்.இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க கல்லூரி பேராசிரியர்கள் வழிகாட்டுதலுடன் என்சிசி, என்எஸ்எஸ் உள்ளிட்ட சேவை மனப்பான்மை கொண்ட மாணவர்களை இணைத்து,இந்த இயக்கத்தில் சேவை செய்யும் மாணவர் களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கலாம்.சேவை மனப்பான்மையுடன் ஈடுபடும் மாணவர்களுக்கு சம்பளம் தேவையில்லை. போக்குவரத்து, உணவு ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்தால் போதும். இந்த மாணவர்களுக்கு முதலில்தடுப்பூசி போட வேண்டும்.
தேவைக்கேற்ப தடுப்பூசி கிடைத்ததும், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமேரேசன் பொருள்கள் வழங்கப்படும் என்றும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே கர்ப்பிணிகளின் பெயர் பதியப்படும் என்றும் அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.நோய்த்தொற்றின் முக்கிய காரணிகளான காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகளோடு வந்து ஸ்வாப் பரிசோதனை செய்பவர்களை உடனடியாக வீட்டிற்கு அனுப்பாமல் பரிசோதனை முடிவுகள் தெரியும்வரை கட்டுப்பாட்டுமையங்களில் வைத்திருக்க வேண்டும்.
நுண் நிதி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்
இந்த அசாதாரணமான காலகட்டத்திலும் நுண் நிதி நிறுவனங்கள் தவணைகள் மற்றும் வட்டி வசூலிப்பதை குறைந்தது ஆறு மாத காலத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும்.சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளை மாவட்ட ஆட்சியர்கள் அழைத்து இது சம்பந்தமாக அறிவுறுத்த வேண்டும். அதையும் மீறி கட்டாயமாக தவணை வசூலித்தல், மிரட்டல்,அச்சுறுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர்மீது உரிய நடவடிக்கை எடுக்க தனி அதிகாரிகளை நியமித்து இதற்கென தனி மொபைலின் செயலி உருவாக்கப்பட வேண்டும்.பொதுமக்களுக்கு தேவையான இரட்டை அடுக்கு முகக் கவசத்தை துணியில் தைத்து அரசு இலவசமாக வழங்கலாம்.சிதம்பரம் ராஜா முத்தையா செட்டியார் மருத்துவமனையில் 250 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்த படுக்கைகளுக்கு தேவையான ஆக்சிஜன் வசதிகளை அரசு உடனடியாக செய்து கொடுக்க வேண்டும்.
கண்காணிப்பு தேவை
நகராட்சி மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் கீழ்நிலையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், மருத்துவமனை பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியத்தை ஒப்பந்ததாரர்கள் இந்த இக்கட்டான காலத்திலும் வழங்குகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்.உதாரணம், நாகை நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.7,000 மட்டுமே வழங்கப்படுகிறது. இதர நகராட்சிகளில் பத்தாயிரம் ரூபாய்வழங்கப்படுகிறது.வேளாங்கண்ணி போன்ற சுற்றுலா தலங்களில் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக தங்குமிடங்கள் இயங்கவில்லை. அதேநேரம், அங்கு பணிபுரிவோர் ஊதியம் மற்றும் இதர வரிகள் மின்கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இந்தத் தொழில் நலிவடையும் இந்த காலத்திற்கு மட்டும் சொத்து வரிவிலக்கு உள் ளிட்ட தேவையான உதவிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும்.வைரஸ் தொற்றை ஒட்டி புலம்பெயர்ந்து சொந்த ஊருக்கு வந்தவர்களுக்கும் முதியோர் உதவித்தொகை பெறுவோருக்கும் அரசு வழங்கும் கொரோனா உதவித்தொகை மறுக்கப்படுகிறது .இவர்களுக்கு இந்த நிவாரண தொகைகிடைக்க முதல்வர் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு ஆலோசனைகளை முன்வைக்கப்பட்டது.