சென்னை
தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக கொரோனா பரவல் மந்தமாக இருந்த நிலையில், இன்று மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. இன்று மட்டும் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாகத் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழகத்தில் இன்று மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1477 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உள்ள நிலையில், கொரோனா பாதிப்பில் சிகிச்சை மீண்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக உள்ளது. வீட்டுக்கண்காணிப்பில் 21,381 பேரும், அரசுக்கண்காணிப்பில் 20 பேரும் உள்ளனர். கண்காணிப்பு காலம் நிறைவுபெற்று இயல்பு நிலைக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 85,253 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக சென்னையில் அதிகபட்சமாக இன்று ஒரு நாளில் மட்டும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், சென்னையில் மொத்தம் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 285 ஆக உள்ளது. கோவையில் புதிதாக 5 பேருக்கும் (மொத்த பாதிப்பு - 133) , திண்டுக்கல்லில் 5 பேருக்கும், நெல்லையில் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.