சென்னை:
கடந்த மே 30ம் தேதி புதுதில்லியில் கூடிய இடதுசாரிக் கட்சிகளின் கூட்டம் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி இந்தியா முழுவதும் இயக்கத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது.இந்த அறைகூவலை நிறைவேற்றுவதற்காக செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) மாநிலச் செயலாளர் என்.கே.நடராஜன் ஆகியோர் விவாதித்து கீழ்க்கண்ட கோரிக்கைகளின் அடிப்படையில் ஜூன் 9 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று தமிழகம் முழுவதும் இந்த இயக்கத்தை ஆர்ப்பாட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவிற்கு முன்பாகவே பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக சமூகத்தின் அனைத்துப் பகுதி மக்களும் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இந்நிலையில் எந்தவித முன் தயாரிப்பும் இல்லாமல் நான்கு மணி நேர அவகாசத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் அனைத்துப் பகுதி மக்களும் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பிரதமரும் மத்திய அரசும் படாடோபமான வார்த்தைகளைத் தவிர உண்மையில் மக்களுக்குத் தேவையான நிவாரணம் அளிக்கும் திட்டங்கள் எதையும் அறிவிக்கவில்லை. எனவே, இடதுசாரி கட்சிகள் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து இயக்கங்களை நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் மத்திய அரசு 7500 ரூபாய், மாநில அரசு 5000 ரூபாயும் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.பொது மக்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கப்படுவது முறைப்படுத்தப்பட வேண்டும். அனைத்து பொருள்களும் அவர்களுக்கு முறையாகக் கிடைப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும். பல இடங்களில் ரேசன் கடைகளில் முறையான ரேசன் விநியோகம் இல்லை எனவும் ஊழல் நடைபெறுவதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மாநில அரசு உடனடியாக அதைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மக்களுக்கான அனைத்து விதமான வருவாய் வாய்ப்புகளும் அடைக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்று பேரிடர் என்று அரசு அறிவித்துள்ள நிலையில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் படி கிராமப்புறத்தில் உள்ள அனைத்து அட்டைதாரர்களுக்கும் 200 நாள் வேலை வாய்ப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும். இதைப்போன்று பேரூராட்சி பகுதிகளுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.இரண்டரை மாதங்களுக்கு மேல் அனைத்தும் முடங்கியுள்ள நிலையில் விவசாயிகள் பலன் பெறும் வகையில் அவர்களுக்கான திட்டங்களை அறிவிக்க வேண்டும். ஊரடங்கால் ஏற்பட்ட சாகுபடி இழப்பிற்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்புரிவோர் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் மத்திய அரசின் அறிவிப்பானது உடனடியாக இந்த பிரச்சனையிலிருந்து அவர்கள் மீண்டு வருவதற்கான எந்த உருப்படியான திட்டத்தையும் முன்வைக்கவில்லை. எனவே அவர்கள் உடனடியாக தொழில் துவங்கவும், தங்களது ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் எந்தவித நிபந்தனையும் இன்றி 10 லட்சம் ரூபாய் கடன் வழங்க வேண்டும். பல்வேறு பகுதியினரும் வங்கிகளிலும், தனியார் நிறுவனங்களிலும் வாங்கியுள்ள கடன்களுக்கு வட்டியை அந்நிறுவனங்கள் கட்டாயமாக வசூலித்துக் கொண்டிருக்கின்றன. வேறு பலருக்கு வட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளதே தவிர தள்ளுபடி செய்யப்படவில்லை. 6 மாதங்களுக்குப் பிறகு தள்ளி வைக்கப்பட்ட வட்டியையும் சேர்த்துக் கட்டுவது மிகப்பெரும் சுமையாகவும் இயலாத காரியமாகவும் இருக்கும். எனவே, கடனுக்கான வட்டியை 6 மாத காலத்திற்கு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
கொரோனாவை எதிர்த்த போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைந்து நிற்கும் நிலையில் மத்திய அரசு வஞ்சகமாக மின்சாரத்தை தனியாருக்கு அள்ளிக் கொடுக்கவும் மாநில அரசுகளுக்கு மின்துறை மீதுள்ள அதிகாரத்தை பறிக்கும் வகையிலும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் உள்ளிட்ட அனைத்து மானியங்களையும் ரத்து செய்யும் வகையிலும் மின்சார சட்டத்தில் திருத்தங்கள் செய்திருப்பதை உடனடியாக கைவிட வேண்டும்.இடம்பெயர் தொழிலாளர்களுக்கு தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்வதற்கு உரிய ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் செய்திட வேண்டும். அதுவரை அவர்களுக்கு உணவு, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை அரசு உத்தரவாதப்படுத்திட வேண்டும்.மருத்துவ இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் மத்திய அரசு தொகுப்பில் தமிழகத்தின் இடஒதுக்கீட்டு உரிமையை மத்திய அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். மாநில அரசு இடஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கொரோனா தொற்று பரவல் சென்னை உட்பட பல இடங்களில் அதிகரித்திருக்கும் நிலையில் பரிசோதனைகளை அதிகப்படுத்தவும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவமனை மூலமாக சிகிச்சை வழங்க வலியுறுத்துவதோடு அவர்களது உடனடி தொடர்பாளர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.மத்திய அரசு மாநிலங்களை தவிக்க விட்டுவிட்டு எந்தவித உதவியும் செய்ய மறுத்து வருகிறது. இந்தப் போக்கை கைவிட்டுவிட்டு உடனடியாக மாநில அரசுகளுக்கு தேவையான நிதி உதவிகளை வழங்குவதற்கும் மாநில அரசுகள் கோரியுள்ள கடன் வாங்கும் வசதியை நிபந்தனைகள் ஏதுமின்றி வழங்கிடவும் வலியுறுத்துகிறோம்.
இவற்றை வலியுறுத்தி, ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு, ஆனால் அதே சமயத்தில்இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்கள் உள்ள அனைத்து இடங்களிலும் கூடுதலான இடங்களில்இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என்றும் காலை 10 மணிக்கு தொடங்கி பத்தரை மணி வரை இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். அனைத்து இடதுசாரி கட்சிகளின் தோழர்களும் இந்த இயக்கத்தில் கலந்து கொண்டு இப்போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.