tamilnadu

பன்முகத்தன்மையுடன் செயல்பட்டவர் தோழர் ஜி.மணி.... விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக்குழு புகழஞ்சலி....

சென்னை:
மறைந்த தலைவர் ஜி.மணி பன்முகத்தன்மையுடன் செயல்பட்டவர் என்று விவசாயத்தொழிலாளர் சங்க மாநிலக்குழு புகழஞ்சலி செலுத்தியுள்ளது.

அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின்  மாநிலத் தலைவர் ஏ.லாசர்,மாநிலப் பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங் கம் ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் கள் சங்கம் முன்னாள் மாநில பொதுச் செயலாளரும் மத்திய நிர்வாகக்குழு உறுப்பினருமான  தோழர். ஜிமணி அவர்கள் காலமானார்என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் . அவருக்கு வயது 72. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில்  பிறந்து வளர்ந்தவர்.படிக்கும் காலத்தில் இந்திய மாணவர் சங்கத்தில் சேர்ந்து பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் ஈர்க்கப்பட்டு, 1972ல்இணைந்தவர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதி செயலாளர்,  திருவள்ளூர் மாவட்டச்செயலாளர், மாநிலக்குழு உறுப்பினர், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகியாக அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை ஏற்று திறம்பட செயல்பட்டவர்.மறைந்த தலைவர் கோ.வீரய்யன் போன்ற தோழர்களுடன் நீண்ட காலம் கிராமப்புற இயக்கத்தை கட்டியமைத்தார். தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத்திலும், மாவட்டக்குழுக்களை உருவாக்கும் தீவிர முயற்சியில் வெற்றிகண்டார்.

விவசாயத் தொழிலாளர்களுக்கு நலவாரியம் உருவாக்கப்படவும்,  சமூகநல திட்டங்கள் மேம்படவும், கிராமப்புற வறுமை போக்கப்படவும் தனது கிராமப்புற ஆய்வுகளை சங்கத்தின் மாநிலக்குழுவில் விவாதித்து  மத்திய, மாநில அரசுகளுக்கு பரிந்துரைசெய்ததோடு அதனை அமலாக்கம் செய்திடஅமைப்பு நிலையில் நின்று வெற்றி பெற்றார்.தனது தொலைநோக்கு பார்வை மூலம்அமைப்பின் ஒன்றிய, மாவட்ட, மாநில நிர்வாகிகள் பெரும்பகுதியினர் இளைஞர்களாக தேர்ந்தெடுக்கப்படவும் மிகப் பெரும் பங்காற்றியவர். சங்கத்தின் ஊழியர்களுக்கு அரசியல் தத்துவம், கிராமப்புற களப்பணி குறித்து ஏராளமான பயிற்சி பட்டறைகள் நடத்தி அதன் மூல ஊழியர்களை தலைவர்களாக மிளிர செய்தவர்.  கிராமப்புற பகுதிகளில் அந்த பகுதி மக்களை அதிகம் பேசவைத்து, நாம் குறைந்த நேரம் பேச வேண்டும்.மக்களின் மொழியில் பேச வேண்டும் என்றுபயிற்சி கொடுத்ததோடு அவருடைய பேச்சில்ஏராளமான சொலவடைகளை பயன்படுத்தியவர்.தமிழகத்தில் கரும்பு விவசாயிகள் சங்கம்,கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் சங்கம்,  பெண் விவசாயத்தொழிலாளர்கள் சங்கம் வளர்ந்தோங்கவும், கரும்பு விவசாயிகள் பிரச்சனைகளை கையாள்வதில் அவருக்கு நிகரான தலைவர் இல்லை என்று சொல்லுமளவிற்கு பன்முகத்தன்மையுடன் செயல்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேல் செங்கொடி இயக்கம் வளர அரும்பணியாற்றிய தலைவருக்கு செவ்வஞ்சலி செலுத்துகிறோம்.  அவரை இழந்து துயரில் மூழ்கியிருக்கும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.