சென்னை:
கட்டாயம் பல்கலை மற்றும் கல்லூரி இறுதியாண்டு தேர்வை நடத்தவேண்டும் என்ற மத்திய அரசின் எதேச்சதிகார போக்கை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:கொரோனா நோய்த் தொற்றுக் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் பல்கலைக் கழக செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படாமல் தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டன. இது தொடர்பாக பல்கலைக் கழக மானியக் குழு சில வழிமுறைகளை பின்பற்ற மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி இருந்தது.தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் அதிகரித்துக்கொண்டு இருக்கும் நிலையில், உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள பல்கலைக் கழகங்களில் செமஸ்டர் தேர்வுகளை நடத்தும் சூழல் இல்லை என மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால், “உயர்கல்வி என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. எனவே செப்டம்பர் இறுதிக்குள் பல்கலைக் கழக இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை மாநில அரசுகள் நடத்தியே தீர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.கொரோனா பேரிடர் காலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுக் கிடக்கும் சூழலில், தேர்வுகள் நடத்துவது குறித்து முடிவெடுக்கக்கூட மாநில அரசுகளுக்கு உரிமை கிடையாது என்று மத்திய பா.ஜ.க. அரசு எதேச்சாதிகாரமாக நடந்துகொள்கிறது.
உயர்கல்வித் துறையில் மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறித்துள்ளது மட்டுமின்றி, லட்சக்கணக்கான மாணவர்களின் உயிரோடு விளையாடும் மத்திய பா.ஜ.க. அரசின் போக்கு வன்மையான கண்டனத்துக்கு உரியது.மகாராஷ்டிரா, தில்லி மாநில அரசுகளைப் பின்பற்றி தமிழ்நாடு அரசும் பல்கலைக் கழக இறுதியாண்டுத் தேர்வுகளை ரத்து செய்து ஆணை பிறப்பிக்க வேண்டும். உள்மதிப்பீடுகளின் அடிப்படையில் பட்டங்களை வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.