tamilnadu

img

“குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமலாக்கக் கூடாது”

தஞ்சாவூர் டிச.17- குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக சார்பில் தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் திமுக சார்பில், தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமை வகித்தார். மாநகரச் செயலாளர் டிகேஜி.நீலமேகம் எம்எல்ஏ வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் எம்.ராமச்சந்திரன், திமுக நிர்வாகிகள் சி.நா.மீ.உபயதுல்லா, கா.அண்ணாதுரை, து.செல்வம், மு.காந்தி, சி.இறைவன், எஸ்.ஜித்து, த.காரல்மார்க்ஸ், எல்.ஜி.அண்ணா, சண்.ராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், “மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஈழத் தமிழர்களையும், சிறுபான்மையினரையும் புறக்கணிக்கும் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.