சென்னை தலைமைச் செயலகத்தில் மரம் விழுந்து உயிரிழந்த பெண் காவலர் கவிதாவின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
சென்னை – இன்று காலை 9 மணியளவில் தலைமைச் செயலக முதலமைச்சர் தனிப்பிரிவு கட்டடத்தின் அருகில் உள்ள 75 ஆண்டுகால பழமை வாய்ந்த மரம், மழையினால் வேரோடு சாய்ந்து விழுந்ததில், அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கவிதா என்ற போக்குவரத்து காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விவரம் அறிந்த உடனே வேலூரில் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி அனுப்பி, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 25 லட்சம் ரூபாய் நிதியும் வழங்கினார். மேலும், வேலூரில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜீவ்காந்தி அரசு மருத்துமவனையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த காவலர் கவிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து கவிதாவின் உடல் அஞ்சலி செலுத்தப்பட்ட பிறகு தண்டையார்பேட்டையில் இருக்கும் அவரது குடியிருப்புக்கு எடுத்துச்செல்லப்பட்டு உரிய முறையில் அடக்கம் செய்யப்பட இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.