tamilnadu

img

சென்னை கிண்டி ரேஸ் கிளப்புக்கு சீல்!

குத்தகை பாக்கி செலுத்தாததால், நீதிமன்ற உத்தரவின்படி சென்னை கிண்டி ரேஸ் கிளப்புக்கு சீல்வைக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கிளப்புக்கு, கடந்த 1945-ஆம் ஆண்டு 160 ஏக்கர் 86 செண்ட் நிலம் 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் அரசு வழங்கியது. இந்த குத்தகைக் காலம் வரும் 2044-ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்த நிலத்தை குத்தகைக்கு விடும்போது ஆண்டுக்கு 614 ரூபாய் 13 காசு வாடகையாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த 1970 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி முதல் இந்த வாடகையை உயர்த்துவது தொடர்பாக விளக்கமளிக்கும்படி மாம்பலம் – கிண்டி வட்டாட்சியர் நோட்டீஸ் பிறப்பித்தார். ஆனால் அதற்கு பதிலளித்த ரேஸ் கிளப் நிர்வாகம், வாடகையை உயர்த்துவது தொடர்பாக  ஒப்பந்தத்தில் எந்தப் பிரிவும் சேர்க்கப்படவில்லை என தெரிவித்தது.
இதை ஏற்க மறுத்த தமிழ்நாடு அரசு, 1970-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்துக்கு வாடகை பாக்கியாக ரூ.730 கோடியே 86 லட்சத்து 81 ஆயிரத்து 297 ரூபாயை செலுத்தும்படி நோட்டீஸ் பிறப்பித்தது. இந்த நோட்டீஸை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வசதி படைத்த பணக்காரர்கள் குதிரைகள் மீது பெரிய தொகையை பந்தயம் கட்டி விளையாடுவதற்காக மாநகரின் மையப்பகுதியில் சுமார் 160 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது அங்கு நடைபெறும் செயல்களில் எந்தப் பொதுநலனும் இல்லை.
அந்த நிலத்தை ரேஸ் கிளப் நிர்வாகம் உள் வாடகைக்கு விட்டு பெரும் தொகையை சம்பாதித்து வருகிறது. எனவே, இந்த நிலத்தை மீட்டு தமிழ்நாடு அரசு ஏழை, எளிய மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் வளர்ச்சித் திட்டங்களுக்காக பொதுநல நோக்கில் பயன்படுத்தலாம். ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட நோட்டீசின்படி செலுத்த வேண்டிய ரூ.730.86 கோடி வாடகை பாக்கியை ஒரு மாதத்துக்குள் தமிழ்நாடு அரசுக்கு மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் செலுத்தவேண்டும். தவறும் பட்சத்தில் மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் வசம் உள்ள 160 ஏக்கர் நிலத்தை போலீஸ் உதவியுடன் மீட்டு, அந்த நிலத்தை பொதுநலனுக்காக அரசு பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், குத்தகை பாக்கி செலுத்தாததால், நீதிமன்ற உத்தரவின்படி சென்னை கிண்டி ரேஸ் கிளப்புக்கு சீல்வைக்கப்பட்டுள்ளது. மேலும், ரேஸ் கிளப்புக்கு வழங்கப்பட்ட குத்தகையை ரத்து செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.