தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்றி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுதினம் (அக்.10,11) பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அந்தமான் கடல் பகுதிகளில் இன்று முதல் 11 ஆம் தேதி வரை பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீழக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மழை அளவை பொறுத்தவரைக் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாகக் கரூர், அகரம் சீகூர் (பெரம்பலூர்), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்) ஆகிய இடங்களில் தலா 10 சென்டிமீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.