சென்னை:
தமிழகத்தில் கடலோர மாவட்டங்களிலும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர தமிழக பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஒடிசா அருகே உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்வதால், வடகிழக்கு மாநிலங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. கேரளா, கர்நாடகா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருவதால் அந்த பகுதிகளுக்கு அடுத்த ஐந்து நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.மத்திய மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளிலும் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதால் அந்த பகுதிகளுக்கும் மீனவர்கள் அடுத்த ஐந்து நாட்களுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.