சென்னை:
கல்விக் கட்டண உயர்வு, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை ரத்து செய்த புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் தொடர் மாணவர் விரோதப் போக்கிற்கு இந்திய மாணவர் சங்கம்கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி. கண்ணன், மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் கடந்தமே 21 ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில் பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலுக்கு மாறாக, மாணவ மாணவியர் 70 சதவீத வருகை பதிவேடு இருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்றும், தேர்வுக்கட்டணத்தை உடனடியாக செலுத்திட வேண்டும் என்றும் நிர்ப்பந்தித்துள்ளது. மே 22 ஆம் தேதியன்று அநியாய கல்விக்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குஎதிரான குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும் அமைதியான முறையில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் போரா ட்டம் நடைபெற்றது. இந்த போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படாது என்ற சுற்றறிக்கையை புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ளதை இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக்கண்டிக்கிறது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களை உயர்கல்வியை நோக்கி வரவைக்கவும், மாணவர்களின் திறமைகளை ஊக்குவித்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் என அனைவருக்குமான உயர்கல்வி வாய்ப்பை உருவாக்கும் நோக்கத்தில் உதவித்தொகை வழங்கும் திட்டம் பல்வேறு கல்விக் குழுக்கள், கல்வியாளர்கள், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட மாணவர் அமைப்புகளின் தொடர் கோரிக்கை, போராட்டங்களின் விளைவாக நாடுமுழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையானது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், மாணவர் நலனில் துளி கூட அக்கறையற்றதன்மையை வெளிப்படுத்தும் விதத்திலும், சர்வாதிகாரப்போக்குடனும் இருக்கின்றது.தொடர்ந்து மாணவர்களின் கல்வி கட்டணஉயர்வு, விடுதிக் கட்டண உயர்வு, மாணவர் களுக்கு எதிராக தொடர் சுற்றறிக்கை வெளியிடுவது பின்னர் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் எதிர்ப்பினால் திரும்பப் பெறுவது என தொடர்ந்து நிர்வாகத் திறமையின்மை, நிர்வாகச் சீர்கேடு என மாணவர் விரோதச் செயலில்ஈடுபட்டு வரும் புதுச்சேரி மத்திய பல்கலைக் கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோர் மீது உடனடியாக மத்திய அரசும்,மனிதவள மேம்பாட்டுத்துறையும் உரிய நடவடிக்கை எடுத்து ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும்.
எனவே புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக நிர்வாகத்தின் தொடர் மாணவர் விரோதப்போக்கை கண்டித்து அனைத்து மாணவர் அமைப்புகளும், கல்வியாளர்களும் ஜனநாயக இயக்கங்களும் கடும் கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.