தமிழகத்தில் நேரடி தேர்வை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு கைதான மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்தக்கூடாது எனவும், தேர்வுகளை ஆன்லைனில் மட்டுமே நடத்த வேண்டும் என பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து அனைத்து பல்கலைக் கழகத்திற்கும் உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியது. அதில் தமிழக உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து கல்லூரிகளுக்கும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் எனவும், இது அனைத்து கல்லூரிகளுக்கும் பொருந்தும் என தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நேரடித் தேர்வை எழுத கால அவகாசம் தேவை என்கிற மாணவர்களின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு ஜனவரி 20 ஆம் தேதிக்குப் பின் தேர்வுகள் நடத்தப்படும். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே நேரடி தேர்வுகள் நடத்தப்படும்.
அதனை தொடர்ந்து நேரடி தேர்வை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படும் என இவ்வாறு அவர் தெரிவித்தார்.