சென்னை, மே 14- ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் ஜூன் 5 முதல் 10 வரை விழிப்புணர்வு பிரச்சாரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மே 14 செவ்வாயன்று சென்னையில் மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர்கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் ப. செல்வசிங், பெ.சண்முகம், என்.குணசேகரன் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில்நிறைவேற்றப்பட்ட தீர்மானம்வருமாறு:தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா பகுதிகளில் - குறிப்பாக நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, காரைக்கால், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களை பாலைவனமாக்கும் வகையில் ஹைட்ரோ கார்பன் என்ற கொடிய திட்டத்தினை அமலாக்கிட மத்திய அரசுமுயற்சி மேற்கொண்டுள்ளது. மாநில அரசும் இதற்கு இசைவு தந்துள்ளது.இத்திட்டத்தினை நிறைவேற்றினால் விவசாய நிலங்களின் நிலத்தடி நீர்வளம் பாதிப்பதுடன் இப்பகுதி நிலங்கள்அனைத்தும் பாலைவனமாக மாறும் நிலை ஏற்படும்.வேதாந்தா போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்காக இத்திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற முடிவுசெய்துள்ளது. இத்திட்டத்தை கைவிட வேண்டுமெனவும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டுமெனவும் மத்திய, மாநில அரசுகளை சிபிஐ (எம்)மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வலியுறுத்துகிறது.ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் பேரழிவு பற்றி மக்களிடையே விளக்கும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை டெல்டா மாவட்டங்களில் வருகின்ற 2019 ஜூன் 5 முதல் 10 வரை மேற்கொள்வதென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்துள்ளது. இந்த பிரச்சார இயக்கத்திற்கு தமிழக மக்கள் முழு ஆதரவினை நல்கிட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறது.