ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி காலமானார். இதை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டமன்ற செயலகம் அறிவித்தது.
இதை தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்; பிப்ரவரி 8-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இத்தேர்தலில், திமுக, நாதக வேட்பாளர்கள் உட்பட 47 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இத்தேர்தலில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக, 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், காலை 9 மணி நிலவரப்படி, 10.95% வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவு மாலை 6 வரை நடைபெற உள்ளது.