சென்னை:
தமிழறிஞர்கள் உள்ளிட்ட 52 பேருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கி கவுரவித்தார். விழாவில் தமிழ் அறிஞர் ந. நித்யானந்த பாரதிக்கு திருவள்ளுவர் விருதும், முனைவர் ப. சிவராஜிக்கு மகாகவி பாரதியார் விருதும், செஞ்சி ந. இராமச் சந்திரனுக்கு தந்தை பெரியார் விருதும் அளிக்கப்பட்டது.தமிழக அரசின் சார்பில் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் திங்களன்று(ஜன.20) நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச் சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “தமிழறிஞர்கள் காத்திருந்தால் நிச்சயம் அவர்களுக்கான திறமை அங்கீகரிக்கப்பட்டு உரிய விருது அளிக்கப்படும்” என்றார். இதையடுத்து 9 பேருக்கு திருவள்ளுவர் திருநாள் விருதும்,13 பேருக்கு சித்திரை தமிழ்ப்புத் தாண்டு விருதும், 10 பேருக்கு சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதும், 3 பேருக்கு உலக தமிழ்ச்சங்க விருதும் முதலமைச்சர் வழங்கினார். இதேபோல், 5 பேருக்கு மரபுவழி கலைவல்லுநர்களுக்கான விருதும், 5 பேருக்கு நவீன பாணி கலை வல்லுநர்களுக்கான விருதும், 7 பேருக்கு நூல்கள் நாட்டுடைமை-பரிவுத்தொகை விருதும் வழங்கி முதலமைச்சர் கவுரவித்தார்.விழாவில் விருதுகளுடன் சேர்த்து அவர்களுக்குரிய பரிசுத் தொகைக்கான காசோலை, ரொக்கப் பரிசு, தங்கப் பதக்கம் உள்ளிட்டவையும் முதலமைச்சரால் வழங்கப்பட்டன.