tamilnadu

img

ஆட்டோ மீட்டர் கட்டணம்: நுகர்வோருடன் அரசு ஆலோசனை

ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணம் மறு நிர்ணயம் செய்வது தொடர்பாக நுகர்வோர் அமைப்புகளுடன் வெள்ளியன்று (மே 13) சென்னையில் தமிழ்நாடு அரசு ஆலோசனை நடத்தியது.

தமிழகத்தில் 2013ஆம் ஆண்டு ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் பின்னர் பெட்ரோல் விலை உயர்ந்தபோதும் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை. இந்த நிலையில் ஆட்டோ கட்டணத்தை மாற்றி அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து போக்குவரத்து துறை இணை ஆணையர் சிவக்குமரன் தலைமையில் அரசு குழு அமைத்தது. அந்தக்குழு ஆட்டோ தொழிற்சங்கத்தினருடன் ஆலோசனை நடத்தியது. இதனைத் தொடர்ந்து நுகர்வோர் அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தினர். இதில், சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 31 நுகர்வோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசியவர்கள், தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்ததுபோல் ஆட்டோக்களில் இலவசமாக ஜிபிஎஸ் மீட்டரை பொருத்த வேண்டும். மாவட்டத்தின் தன்மைக்கேற்ப கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அம்சங்களை வலியுறுத்தினர்.

தொழிற்சங்கத்தினர், நுகர்வோரின் கருத்துகளை முழுமையாக கேட்டு, அதன்பிறகு அறிக்கை தயாரித்து முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.