திருவள்ளூர், ஏப்.23- தேஜோ தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வுகேட்டு காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம்,சோழவரத்தை அடுத்த அழிஞ்சிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட இருளிப்பட்டில், தேஜோ தொழிற்சாலை இயங்கி வருகிறது. அங்கு நிலக்கரி சுரங்கம், மின் உற்பத்தி நிலையங்கள், துறைமுகம் போன்றவற்றிற்கு பயன்படுத்தும் ரப்பர் பெல்டுகள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் இந்தியா மட்டுமல்லாமல், ஆஸ்திரேலிய, சவுதி அரேபியா போன்ற வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.இந்த தொழிற்சாலையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக 180 தொழிலாளர்கள் நிரந்தரதொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இருந்தாலும் அவர்களுக்கு மிக குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வுக்கானஒப்பந்தம் செய்யப்பட வேண்டும். ஆனால் நிர்வாகம் எந்த சட்டத்தையும் மதிக்கவில்லை. தொழிற்சங்கம் வைக்கும் கோரிக்கைகளையும் நிராகரித்து வருகிறது. மேலும் சட்டவிரோதமாக நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
2016 ஆம் ஆண்டுபோடப்பட்ட ஒப்பந்தத்தையும் நிர்வாகம் அமலாக்காததால், இது குறித்த வழக்கு தொழில் தீர்பாயத்தில் உள்ளது. இந்நிலையில் குறைந்த பட்ச ஊதியம் ரூ.20ஆயிரம், வீட்டு வாடகைபடி25 விழுக்காடு, போக்குவரத்துப்படி ரூ.2ஆயிரம், சலவைப்படி ஆயிரம், கல்விக் கட்டண முன்பணம்ரூ.15ஆயிரம், பண்டிகை கால முன்பணம் ரூ.5 ஆயிரம்,3 ஆண்டுகளுக்கு ஒரு முறைஒப்பந்தம் போடுவது உள்ளிட்ட கோரிக்கைகளை அமல் படுத்த வேண்டும் எனஒரு மாதத்திற்கு முன்பேசிஐடியு சங்கம் சார்பில் தொழிலாளர்கள் நிர்வாகத்திற்கு எழுத்து பூர்வமாக தெரிவித்துள்ளனர். ஆனால்நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.இந்நிலையில் அனைத்து தொழிலாளர்களும் தங்கள்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி செவ்வாயன்று (ஏப்.23) காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயன், இன்ஜினியரிங் சங்க செயலாளர் கே.அர்ஜூனன், பொது தொழிலாளர் சங்கத்தின் சோழவரம் வட்டத் தலைவர் ஏ.நடராஜன், கம்பெனி நிர்வாகிகள் பாலாஜி, வரதராஜன், லோகநாதன், மகேஷ்குமார் மற்றும் சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால் ஆகியோர் பேசினர்.