சென்னை:
வருமான வரி பிடித்தத்தை செலுத்துவது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.கடந்த 2 ஆண்டுகளில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட பேராசிரியர்களுக்கு வழங்கிய உழைப்பூதியத்தில் டிடிஎஸ் (TDS) எனப்படும் வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராசிரியர்களிடம் இருந்து சுமார் 1 கோடியே 20 லட்சம்ரூபாய் வரை டிடிஎஸ் வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொகையை முறையாக செலுத்தவில்லை எனக் கூறி, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசனுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரியை உடனடியாக செலுத்தி அதற்கான ரசீதுகளுடன் மார்ச் 13 காலை 11.30 மணிக்கு வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.