சென்னை:
தமிழக முதலமைச்சராக பதவியேற்றதும் கோபாலபுரம் புறப்பட்டு சென்ற மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோபாலபுரம் இல்லத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் படத்திற்கு மரியாதை செலுத்தினார். பின்னர் தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். அதேபோல் சிஐடி நகர்வீட்டிற்குச் சென்று அங்கு ராசாத்தி அம்மாள் இடமும் மு.க.ஸ்டாலின் ஆசி பெற்றார். இதைத் தொடர்ந்து சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பெரியார் நினைவிடம்
இதையடுத்து சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பேராசிரியர் அன்பழகன் இல்லத்திற்கு சென்று அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச் சர்களும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
தொண்டர்கள் உற்சாகம்
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ளது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் திமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். கட்சி தலைமை அலுவலகத்திற்கு வெளியே திரண்டிருந்த கட்சி தொண்டர்கள், மு.க.ஸ்டாலினை வாழ்த்தி முழக்கங் கள் எழுப்பினர். அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பதவியேற்பு விழா மிக எளிமையாக நடைபெற்றது. தொண்டர்களை இந்த விழாவிற்கு வரவேண்டாம் என்று அன்பு வேண்டுகோள் விடுத்ததை அடுத்து தமிழகம் முழுவதும் அவரவரது இல்லங்களிலும் பகுதிகளிலும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.