சென்னை:
மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள விவசாய விரோத சட்டங்களுக்கு அதிமுக ஆதரவு கொடுத்து, விவசாயிகளுக்கு மிகப்பெரும் துரோகத்தை செய்துள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விவசாயிகளுக்கு விரோதமான மூன்று மசோதாக்களை வியாழனன்று நாடாளு மன்றத்தில் மோடி அரசு நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் விவசாயிகளை மேலும் திவாலாக்கு வது மட்டுமன்றி ஒட்டுமொத்த விவசாயத்தையும், கார்ப்பரேட் கம்பெனிகளிடம் ஒப்படைக்க வழி செய்வதாகும். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி கள் மட்டுமன்றி பாஜகவினுடைய கூட்டணிக் கட்சியான சிரோன்மணி அகாலிதளம் கட்சி இம்மசோதாக்களை எதிர்த்து வாக்களித்தது மட்டுமின்றி அக்கட்சியின் சார்பில் மத்திய அரசில் இடம் பெற்றிருந்த அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்துள்ளார். இச்சூழ்நிலையில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்மசோதாவை ஆதரித்து வாக்களித்திருப்பதானது விவசாயிகளுக்கு செய்திருக்கும் பெருந்துரோகமாகும்.
ஏற்கனவே அமலில் உள்ள அத்தியாவசிய பொருட்கள் பாதுகாப்பு சட்டத்தை திருத்தம் செய்து புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் அத்தியாவசிய பொருட்கள் பாதுகாப்பு சட்டத்தின் பட்டியலில் இடம் பெற்றிருந்த உணவு தானியங்கள், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பல பொருட்கள் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பொருட்களுக்கு குறைந்தபட்ச விலைநிர்ணயம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பொருட்களை ஸ்டாக் வைப்பதற்கான வரம்பும் நீக்கப்பட்டுள்ளது. அதாவது இப்பொருட்களை பெரும் கார்ப்பரேட் கம்பெனிகள், மொத்த வியாபாரிகள் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கி பதுக்கி வைத்துக் கொள்ளவும், விலையேற்றம் செய்து கொள்ளையடிக்கவும் வழி செய்யப்பட்டுள்ளன.
நடைமுறையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட சட்டத்தை திருத்தி அதன் நோக்கத்தையே பாழ்படுத்தியுள்ளது மத்திய அரசு. இந்த சட்டத்தின்படி விவசாய விளைபொருட்களை வியாபாரிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மட்டுமே கொள்முதல் செய்ய முடியும் என்பதை மாற்றி விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு பொருட்களை வாங்குவதற்கு மொத்த வியாபாரிகளுக்கு வழி திறந்து விடப்பட்டுள்ளது. இந்த கொடுமையை மூடி மறைக்க விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக எடுத்து சென்று விற்பனை செய்து லாபமீட்ட முடியுமென, போகாத ஊருக்கு வழிகாட்ட முயற்சித்துள்ளனர். அடுத்து விவசாயத்தை நேரடியாக கார்ப்பரேட் மயமாக்கும் ஒப்பந்த விவசாய சட்டத்தை நிறைவேற்றியுள்ளார்கள்.
ஏற்கனவே, மின்சார சட்ட திருத்த மசோதாகொண்டு வந்து இலவச மின்சாரத்தை பறிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும். அதேபோல சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவுச் சட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் தொழிற்சாலைகள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விரும்புகிற இடத்தில் தொழிற்சாலைகளை தங்குதடையில்லாமல் துவக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அடுக்கடுக்கான தாக்குதல்களை மத்திய அரசு தொடுத்து வரும்போது அனைத்து எதிர்க்கட்சிகளும், விவசாய அமைப்புகளும் ஒன்று திரண்டு போராட வேண்டிய சூழ்நிலையில், அதற்கு மாறாக அதிமுக அரசு மத்திய அரசுக்கு துணை போவதும், மேற்கண்ட சட்டங்களுக்கு ஆதரவு அளித்திருப்பதும் தமிழக விவசாயிகளுக்கு இழைத்திடும் மாபெரும் துரோகமாகும். எனவே, மத்திய, மாநில அரசுகளின் இப்போக்கினை எதிர்த்து ஒன்று திரண்டு போராட முன் வர வேண்டுமென அனைத்து கட்சிகளையும், விவசாய அமைப்புகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.