சென்னை:
தமிழ்நாடு முழுவதும் மின்துறை தொடர்பாக பெறப்பட்ட 1 லட்சத்து 60 ஆயிரம் புகார் மனுக்களில் 1 லட்சத்து 51 ஆயிரம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் தெரிவித்தார்.
அனைத்து மின் பகிர்மான மாவட்ட தலைமை பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள், வட்டார பொறியாளர்கள் ஆய்வு கூட்டம் சென்னையில் சனிக்கிழமையன்று(ஜூலை31) நடந்தது.மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை வகித்தார். இயக்குநர் ராஜேஷ் லகானி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் 40 நாட்களில் மின்சார வாரியம் தொடர்பான புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கைகள், உயர்மட்ட மின் பாதையை குறைத்து புதைவிட பாதையாக மாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.கூட்டத்தின் போது அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், தமிழகம் முழுவதும் மின்சார வாரியம் தொடர்பாக 1 லட்சத்து 60 ஆயிரம் புகார்கள் வந்தன. இதில் 1 லட்சத்து 51 ஆயிரம் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள புகார்களுக்கான தீர்வு குறித்து ஆலோசிக்கப்படுகிறது என்றார்.