சென்னை:
பிரதமர் உழவர் உதவித் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பது குறித்து மத்திய புலனாய்வுத்துறை விசாரணைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியே பரிந்துரை செய்ய வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:
“பிரதமர் உழவர் உதவித் திட்டத்தில் தமிழ்நாட்டில் ஒரே மாதிரியான முறைகேடு நடைபெற்றுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், அதிகாரிகள் பங்கேற்புடன் முதல்முறையாக நடந்த மிகப் பெரிய ஊழல் இதுதான். தமிழகத்தில் ஏற்கெனவே நடைபெற்ற ஊழல்கள் எல்லாம் அரசியல்வாதிகள் தொடர்புடையவைகளாக இருந்தன. இந்த ஊழலைப் பொறுத்தவரை ஆளுங்கட்சியைச் சேர்ந்த உயர்மட்ட தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதை மறுக்க முடியாது.ஆனால், உள்ளூர் ஆளுங்கட்சியினருக்கு இதில் தொடர்பு இருக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த முறைகேட்டில் ஊழல் அதிகாரிகள், விவசாயத் துறையில் உள்ள தற்காலிக ஊழியர்கள், இன்டெர்நெட் மையங்களின் உரிமையாளர்கள், சில இடங்களில் ஏஜெண்டுகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.
விவசாயிகளுக்கு நிதி வழங்கும் திட்டத்தில் 6 லட்சம் போலி பயனாளிகளை சேர்த்து ரூபாய் 110 கோடி அளவில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.ஆனால், முதல்வரோ இந்த ஊழலுக்கும், மாநில அரசுக்கும் தொடர்பு இல்லை என்று கூறி மத்திய அரசின் மீது பழி போடுகிறார்.மத்திய அரசின் மீது மாநில முதல்வரே குற்றம் சாட்டுவதால் ரூ.110 கோடி மெகா ஊழலில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை எப்படி கண்டுபிடிப்பது என்றே தெரியவில்லை.
பிரதமரின் உழவர் உதவித் திட்டத்துக்கு விண்ணப்பிப்பதை ஆன்லைன் முறைக்கு மத்திய அரசு மாற்றியதால், கொரோனா காலத்தில் அதனை அதிகாரிகள் சரிபார்க்க முடியவில்லை என்று ஊழலை மூடிமறைக்க முயற்சி செய்கிறார். ஆனால், இந்த திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதை மறுக்க முடியவில்லை.
தமிழகத்தில் மட்டும் 5 லட்சம் போலி பயனாளிகள் பதிவு செய்யப்பட்டு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று தெரிகிறது. இந்தியாவிலேயே, பிரதமர் பெயரால் நடைமுறையில் உள்ள பிரதமர் உழவர் உதவித் திட்டத்தில் மிகப் பெரிய மோசடி நடந்த மாநிலமாக தமிழகம் இருக்கிறது.முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான எடப்பாடியில் மட்டும் 11 ஆயிரம் போலிப் பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதில் அதிமுகவினர் சம்பந்தப்பட நிறைய வாய்ப்பு இருக்கிறது. வருவாய்த்துறை, விவசாயத்துறை மற்றும் வங்கி அதிகாரிகள் கூட்டு இல்லாமல் இவ்வளவு பெரிய ஊழல் நடைபெற வாய்ப்பு இல்லை.
தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களில் பல்வேறு முறைகேடுகள் நடப்பது தொடர் கதையாக நிகழ்ந்து வருகிறது.பிரதமர் உழவர் உதவித் திட்ட மோசடியைப் போல தமிழகத்தில் மத்திய அரசின் நிதியுதவியில் கட்டப்படுகிற தொகுப்பு வீடு கட்டுவதிலும் மெகா மோசடி நடைபெற்றுள்ளது.எனவே, பிரதமர் உழவர் உதவி திட்ட மோசடி குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை தொடங்கியிருக்கிறார்கள். இந்த விசாரணையின் மூலம் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்களா? மோசடி செய்யப்பட்ட பணம் திரும்பப் பெற முடியுமா? என்பதெல்லாம் மிகப்பெரிய கேள்விக்குறியாகி இருக்கிறது.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்காமல், மத்திய புலனாய்வுத்துறை விசாரிப்பது ஒன்றே குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு உதவியாக இருக்கும்.மத்திய புலனாய்வுத்துறை விசாரணைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியே பரிந்துரை செய்ய வேண்டும்”இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.