சென்னை,மே 19கடந்த ஏப்ரல் மாத ஊதியத்தை பெறாத 8,462 ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், கடந்த 2011 ஆம் ஆண்டு 1,590 முதுநிலை ஆசிரியர்கள், 6,872 பட்டதாரி ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டனர். தற்காலிகப் பணியிடங்கள் என்பதால், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆசிரியர்கள் பணி நீட்டிப்பு செய்யப்பட்டு, ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இறுதியாக மார்ச் மாதம் வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதன் பின்னர் பணி நீட்டிப்பு ஆணை எதுவும் பிறப்பிக்கப்படாததால், கடந்த ஏப்ரல் மாத ஊதியத்தை ஆசிரியர்கள் பெறவில்லை.இதனால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவித்தனர். இதனை பரிசீலித்த பள்ளிக்கல்வித்துறை, ஆசிரியர்களின் ஏப்ரல் மாத ஊதியத்தை வழங்குவது தொடர்பான ஆணையை பிறப்பித்துள்ளது. இதன்படி 8,462 ஆசிரியர்களுக்கும் ஒருவாரத்தில் ஊதியம் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.