சென்னை, ஏப்.24-40 சதவீத ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தபால் ஓட்டை இன்னும் பதிவு செய்யவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 18 ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தல் பணியில் 3 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.இவர்கள் வாக்களிப்பதற்கு தபால் ஓட்டு வழங்கப்படுவது வழக்கம். உயர் அதிகாரியிடம் கையெழுத்து பெற்று தபால் ஓட்டுக்கள் போடுவார்கள். அல்லது தபாலில் அதை அனுப்பி வைப்பார்கள். இதற் காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு தேர்தலுக்கு முன்பே தபால் வாக்குப் படிவம் வழங்கப்பட்டது.ஆர்வம் மிக்க ஊழியர்கள் உடனே அதை பூர்த்தி செய்து உயர் அதிகாரியிடம் கையெழுத்து வாங்கி தபால் வாக்குக் களை அனுப்பி விட்டனர். 40 சதவீத அரசு ஊழியர்கள் தபால் ஓட்டை இன்னும் பதிவு செய்யவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.இது குறித்து ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் அன்பரசு கூறியதாவது:தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் ஓட்டு போடுவதற்கான கால அவகாசம் ஓட்டு எண்ணும் நாள்வரை அதாவது மே 23 ஆம் தேதி வரை உள்ளது. இந்த இடைப்பட்ட நாட்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் தபால் வாக்கை பதிவு செய்யலாம். இதற் காக 3 கடிதம் அரசு ஊழியர்களிடம் இருக் கும். வாக்குசீட்டு, தேர்தல் பணிக்கான கடிதம், அதிகாரியின் கையெழுத்திட்ட படிவம் இவற்றை இணைத்து வாக்களிக்க வேண்டும்.தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்த பிறகு 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால் அரசு ஊழியர்கள் சிலர் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். இதனால் வாக்களிக்காமல் இருந்திருக்கலாம். ஆனாலும் இன்னும் கால அவகாசம் இருப்பதால் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.