திருவொற்றியூர், மே 21-திருவொற்றியூர் அடுத்த எர்ணாவூர் ஆதிதிராவிடர் காலனி 15ஆவது தெருவில் வசிப்பவர் ராஜம்மாள் (47). இவர் திங்கட்கிழமை மாலை வீட்டை பூட்டி விட்டு,திருவொற்றியூர் பாரத் நகரில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றார். இரவு 9 மணியளவில் இவரது வீட்டின் குடிசை திடீரென தீப்பிடித்தது. காற்று பலமாக வீசியதால் அருகே இருந்த குடிசைகளுக்கும் தீ பரவியது.மேலும் தார்ஷீட் போட்ட வீடுகளும் இருந்ததால் தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்தன. வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். அக்கம்பக்கத்தினர், தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முற்பட்டனர்.சம்பவ இடத்திற்கு வந்த எண்ணூர், திருவொற்றியூர் பகுதிகளில் இருந்து 2 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 4 குடிசைகள் முற்றிலுமாக எரிந்து சாம்பாலனது.