tamilnadu

img

190 தடுப்பணைகள், 12 அணைக்கட்டுகள்.... சட்டமன்றத்தில் அறிவிப்பு....

சென்னை:
தமிழ்நாட்டில் புதிதாக 190 தடுப்ப ணைகள், 4 தரைகீழ் தடுப்பணைகள், 6 கதவணைகள், 12 அணைக்கட்டுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்று நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார்.

மு.க.ஸ்டாலின் அரசு பதவியேற்று முதல் முறையாக நிதிநிலை மற்றும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக வேளாண்மைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட் டது. அதன்மீது உறுப்பினர்கள் விவாதமும் அமைச்சர்களின் பதிலுரையும் முடிந்தது.இதனைத் தொடர்ந்து, மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் திங்களன்று(ஆக23) தொடங்கியது. இந்த விவாதம் செப்.13 ஆம் தேதிவரைக்கும் நடைபெறுகிறது. நீர்ப்பாசனதுறை மானியக்கோரிக்கை மீது நடந்தவிவாதங்களுக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து பேசுகையில் “நீர்வளத்தில் தனி கவனம் செலுத்தவேண்டும் என்று உலக வங்கியும் அறிவுறுத்தியதால் பொதுப்பணித்துறை யோடு இணைந்திருந்தாலும் தனியாக பிரிக்கப்பட்டதாக கூறினார்.

பொதுப்பணித்துறைக்கு தாம் அமைச்சராக இருந்த காலத்தில் 20 அணைகள் கட்டப்பட்டன என்றும் முந்தைய அதிமுக ஆட்சியால் கைவிடப்பட்ட சோத்துப்பாறை, செண்பகவல்லி திட்டங்களும் இந்த முறை நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் மேட்டூர், அமராவதி, வைகை, பேச்சிப்பாறை, குண்டாறு, ராமநதி, வெலிங்டன் அணைகள் மற்றும் காவிரிப்பாக்கம் ஏரி ஆகியவற்றின் கொள்ளவை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், 23 மாவட்டங்களில் 200 குளங்கள் புனரமைக்கப்படும் எனவும் அறிவித்தார்.தலைநிமிரும் தொலைநோக்குத் திட்டத்தின்படி, 31 மாவட்டங்களில் 12 வடிநிலைங்களைச் சார்ந்த 207 ஏரிகள், கண்மாய்கள், வழங்கு வாய்க்கால்கள், வரத்துக் கால்வாய்கள், குளங்கள் மற்றும் அவற்றின் கட்டுமானங்கள் நபார்டு நிதியுதவியுடன் படிப்படியாக புனரமைக்கப்படும். புதிய மற்றும் பெரிய நீர் ஆதார திட்டங்களுக்கு சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து, விரிவான மதிப்பீடு தயாரிக்க 7 திட்டங்களுக்கான ஆய்வுப் பணிகள் இந்த மேற்கொள்ளப்படும் என்றும் புதிய அறிவிப்பையும் துரைமுருகன் வெளியிட்டார்.