சென்னை:
பத்தாம் வகுப்பு மாணவர்களுக் கான பொதுத்தேர்வு குறித்த குழப்பமான, பாகுபாட்டை ஏற்படுத்தும் அறிவிப்பை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வை விருப்பமுள்ள மாணவர்கள் எழுதலாம் என அரசு அறிவித்துள்ளது. அதாவது கூடுதல் மதிப்பெண் பெற விரும்பும் மாணவர் களுக்கு மட்டும் தேர்வு என்பது அப்பட்டமான பாரபட்சம். பாகுபாட்டை ஊக்கப்படுத்துகிற சமவாய்ப்பைப் பறிக்கும் இந்த அறிவிப்பை இந்திய மாணவர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
ஏற்கனவே கொரோனா தொற்றால்மாணவர்கள் வீடுகளில் இருக்கும் சூழலில் இவ்வாறான அறிவிப்பு மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் பெரும் நெருக்கடியை உருவாக்கும். மேலும் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதே அனைத்து மாணவர்களின் நோக்கமாக இருக்கிறது. அதற்கு மாணவர்கள் பாதுகாப்பான சூழலில் தேர்வுஎழுதுவதற்கான சூழலை உருவாக்கா மல் நோய்த்தொற்று காலத்தில் ‘வலுத்தவன் வந்து தேர்வெழுதிக் கொள்’ எனதமிழக அரசு தனது கடமையை மாணவர் மற்றும் பெற்றோர் மீது சுமத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
ஆகவே கடந்த ஆண்டை போல அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான தேர்ச்சியை அறிவிக்க வேண்டும். அல்லது நோய்த் தொற்று குறைந்தபின்பு சூழலுக்கு ஏற்ப அனைத்து மாணவர்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்தி அனைவருக்கும் தேர்வு நடத்த வேண்டும். ஆகவே மாணவர்களிடம் பாகுபாட்டை, குழப்பத்தை ஏற்படுத்தும்தற்போதைய அறிவிப்பை அரசு திரும்பப்பெற வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.