tamilnadu

img

திரையரங்குகளில் 100% இருக்கைகள் அனுமதிக்கும் ஆபத்தான முடிவை உடனடியாக கைவிடுக.... தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்....

சென்னை:
திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைகள் அனுமதிக்கும் ஆபத்தான முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ஜனவரி 10ந் தேதி முதல், 100 சதவிகித இருக்கைகளுடன் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் பரவல் இன்னமும் நீடிக்கும் நிலையில் தமிழக அரசு எடுத்துள்ள இத்தகைய முடிவு பொருத்தமற்றதாகும் என்பதோடு, திரையரங்கிற்கு செல்லும் பார்வையாளர்களுக்கு வேகமாக கொரோனா நோய்த் தொற்று பரவுவதற்கான காரணமாகவும் இது அமைந்து விடும்.மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து இன்னமும் முழுமையாக அனுமதிக்கப்படவில்லை. பொது நிகழ்ச்சிகள், அரங்க நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது. 

இந்நிலையில் பொழுது போக்கிற்காக மக்கள் செல்லும் திரையரங்கத்தில் மட்டும் 100 சதவிகித இருக்கைகளுடன் அனுமதிப்பது எனும் தமிழக அரசின் முடிவு அறிவியல் பூர்வமானதல்ல என்பதோடு, இரண்டு அல்லது மூன்று மணி நேரம் குளிரூட்டப்பட்ட அரங்கில் மக்கள் நெருக்கமாக அமர்ந்திருப்பதால் கொரோனா நோய்த் தொற்றுவதற்கான வாய்ப்பு அதிகமாகும் என்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் அறிவுறுத்தலையும் மீறுவதாகும். மேலும் மத்திய சுகாதாரத் துறை செயலாளர், இத்தகைய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என  தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தமிழக மருத்துவர் ஆலோசனைக்குழுவும் இதை சிபாரிசு செய்யவில்லை.எனவே, தமிழக அரசு  திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைக்கு அனுமதி என்ற தனது முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.