செங்கல்பட்டு, ஜன. 6- செங்கல்பட்டு அடுத்த கொண்டமங்கலம் கிராமத்தில் நூலகம், சாலை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் செய்ய வலியுறுத்தி பள்ளி சிறுவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். செங்கல்பட்டு அருகே கொண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்த காவியஸ்ரீ, இவர் 3ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இதே போல் அதே கிராமத்தை சேர்ந்த கண்ணதாஸ் 5ஆம் வகுப்பு பயின்று வருகின்றனர். இவர்கள் இருவரும் திங்களன்று (ஜன 06) செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் பங்கேற்று தங்களது கிராமத்தில் நூலகம், சாலை வசதி, மின் விளக்கு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்யவேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் பிரியாவிடம் மனு அளித்தனர். இது குறித்து மாணவிகள் கூறியதாவது: எங்கள் பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பல்வேறு இடங்களில் சென்று பல்வகைக் கல்வியை கற்று வருகின்றனர். தாங்கள் கற்கும் கல்வியறிவை விரிவுபடுத்தும் விதத்தில் மேலும் பல புத்தகங்கள் வாங்க நிதி வசதியில்லாததினாலும் அருகில் நூல் நிலையம் இல்லாததாலும் மிகவும் சிரமப்படுகிறோம். ஆனால் கல்விக்காக அதிக விலை கொடுத்து புத்தகங்கள் வாங்க இயலாத நிலை உள்ளது. மேலும் பள்ளி விடுமுறை நேரத்தை பயனுள்ளமுறையில் கழிக்க பல அரிய நூல்களை படிக்க வேண்டும் என்ற விரும்புகிறோம். எங்கள் முயற்சிக்கு ஆக்கம் சேர்க்கும் வகையில் எங்கள் பகுதியில் நூலகம் ஒன்றை அமைத்துக்கொடுத்தால் அது பேருதவியாக இருக்கும். இதனால் நாங்கள் மனு அளித்தோம். அதே போல் எங்கள் கிராமத்தில் போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவேண்டியும் மனு அளித்தோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.