காஞ்சிபுரம்:
செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் மீண்டும் திறக்கப் பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் பொன்னையா, மகேஸ்வரி ஆகியோர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அளவில் மிகப்பெரிய ஏரிகளான இவை நிரம்பத் தொடங்கியுள்ளதால் பாதுகாப்பு கருதி, உபரி நீர் கால்வாய்கரையோர மக்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் பொன்னையா வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனவரி 5 ஆம் தேதி நண்பகல் புழல் ஏரியில் இருந்து விநாடிக்கு 500 கன அடியாக தண்ணீர் திறக்கப்பட உள்ளது. மேலும், ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்துக்கேற்ப படிப்படியாக நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்படும்.புழல் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் சுற்றியுள்ள கிராமங்களான நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்ட் லைன், புழல், வடபெரும் பாக்கம், மஞ்சம்பாக்கம் வழியாகச் செல்லும். ஆகவே கரையோரம், தாழ்வானப் பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருங்கள்’ என அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோல், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம் பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்டது. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்தில் உள்ளது.ஏரியின் நீர் மட்டம் மொத்த உயரம் 24 அடியாகும். இதன் முழுகொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகும். தற்போது பெய்து வரும் மழையினால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகமாக உள்ளது. இதனல் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. ஆகவே, ஏரியிலிருந்து உபரி நீர் ஜன.5 அன்று பிற்பகல் 2 மணிக்கு முதற்கட்டமாக 500 கன அடி நீர் வெளியேற்றப்படும்.இதனால், சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும் என்றும் ஆற்றின் கரையோரம் நின்று வேடிக்கை பார்க்கக் கூடாது, குளிக்கக் கூடாது என்றும் எச்சரிக்கை செய்திருக்கிறார்.