புதுதில்லி:
ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை, மத்திய அரசு முழுமையாக வழங்காவிட்டால் மாநில அரசு களின் நிதிப் பற்றாக்குறை மிகமோசமான பாதிப்பைச் சந்திக்கும் என்று ‘இக்ரா’ (Investment information and Credit Rating Agency - ICRA) நிறுவனம் தனது ஆய்வில் எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறை என்ற பெயரில், கடந்த 2017 ஜூலை 1 முதல் புதிய ‘சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) நரேந்திர மோடி அரசு அமல்படுத்தியது. அதாவது அதுவரை மாநிலங்களுக்கு நேரடியாகவந்துகொண்ட வரி வருவாயில் பெரும்பகுதியைத் தன்வசம் எடுத்துக் கொண்டது. இதற்கு எதிர்ப்புக்கள் எழுந்த நிலையில், மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புகளை 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசே ஈடுகட்டும்என்று அப்போது சமாளிக்கப் பட்டது. மாநிலங்களின் ஆண்டு வருவாய் வளர்ச்சி 14 சதவிகிதத்தை விடக் குறைவாக இருந்தால்மத்திய அரசு அதற்கான இழப்பீட்டை வழங்கும். ஆனால், உறுதியளித்தபடி இந்த இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு வழங்குவதில்லை. ஒவ்வொரு முறையும் பெரும் போராட்டத்திற்குப் பிறகே மாநிலங்கள் தங்களுக்கான நிதியைப் பெற்று வருகின்றன.
இதனிடையே கொரோனா பிரச்சனை வந்தது, மோடி அரசுமிகவும் வசதியாகிப் போனது. இதனைக் காரணமாக காட்டி, ஒரேயடியாக ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்க முடியாது என்று அண்மையில் கூறிவிட்டது. இது மாநிலங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்நிலையில், மாநில அரசுகளுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை முழுவதுமாக வழங்காமல் இருந்தால் மாநிலங்களின் செலவுகளில் ரூ. 3 லட்சம் கோடி வரை குறையும் என்று ‘இக்ரா’ நிறுவனம் தனது ஆய்வில் எச்சரித்துள்ளது. இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்குப் பதிலாக மாநில அரசுகள் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு வழங்கியுள்ள ‘சலுகை’யால் மாநிலங்களின் நிதிப்பற்றாக்குறை 4.25 சதவிகிதம் முதல் 5.52 சதவிகிதம் வரை உயரும்; இதனால் நடப்பு நிதியாண்டில் மாநில அரசுகள் தங்களின் மிக முக்கியமான மூலதனச் செலவுகளை மேற்கொள்ள முடியாது; அடிப்படை வளர்ச்சித் திட்டங்கள் அடியோடு முடங்கும். இது பொதுமக்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்று இக்ரா கூறியுள்ளது.