tamilnadu

img

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் நிகர லாபம் 17 சதவீதம் அதிகரித்து ரூ.6,099 கோடி ஈட்டியது!

இந்தியன் ஆயில் நிறுவனம் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் நிகர லாபம் 17 சதவீதம் அதிகரித்து, ரூ.6099 கோடியை ஈட்டியுள்ளது.

கடந்த ஆண்டில் இதே காலாண்டில் ரூ.5218 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிறுவனத்தின் வருவாய் 2018-19ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 1,44,472 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இதுவே கடந்த 2017-18ஆம் ஆண்டில் 1,36,716 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து இந்நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் சிங் கூறுகையில், ”ஐஓசி கடந்த 2017-18 நிதியாண்டில், 5,06,428 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. இதுவே கடந்த 2018-19 நிதியாண்டில் 6,05,924 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 19.64 சதவீதம் அதிகமாகும். அதிக அளவில் விற்பனை மற்றும் பொருட்களின் தரம் ஆகியவையே இந்த வருவாய் அதிகரிப்புக்கு காரணமாகும். எனினும் இந்த வருடத்தின் நிகர லாபம் 21 சதவீதம் வீழ்ச்சியடைந்தே காணப்படுகிறது. குறிப்பாக பரிமாற்ற இழப்புகள் மற்றும் சரக்குகளின் குறைந்த லாபம் போன்றவற்றால், 16,894 கோடி ரூபாய் நஷ்டமானது.

இதுவே மொத்த சுத்திகரிப்பு செலவு கச்சா எண்ணெய் விலை மற்றும் இறுதிப் பொருட்களின் விற்பனையிலிருந்து பெறப்பட்ட வருவாய்க்கான வித்தியாசம் 2018-19ல் பேரல் ஒன்றுக்கு 5.41 டாலராக குறைந்துள்ளது. இது 2017-18ல் பேரல் ஒன்றுக்கு 8.49 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில், கச்சா எண்ணெய் இருப்பின் மூலம் பெறப்பட்ட லாபம் ரூ 2,655 கோடி” என்று அவர் தெரிவித்தார்.