ஏழை, எளிய, நடுத்தர மக்கள், தொழிலாளர்கள் மற்றும் மத்திய மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள் என பலரும் வாழ்நாளில் கடினமாக உழைத்து ஈட்டிய வருவாயை சேமிப்பு மற்றும் நீண்ட கால வைப்புத் தொகையாக பொதுத்துறை வங்கிகளில் முதலீடு செய்கின்றனர்.
கடந்த பல ஆண்டுகளாக தனியார் நிறுவனங்கள் ஆட்குறைப்பு, இயந்திரமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, தொழிலாளர்களை வெளியேற்றி வருகின்றன. அவ்வாறு வெளியேற்றப்படுபவர்களுக்கு ஓய்வூதியம் இல்லாத காரணத்தால் பணிக்காலத்தில் சேமித்து வைத்த வருங்கால வைப்பு நிதி, பணி ஓய்வுத்தொகை போன்றவற்றின் மூலம் கிடைக்கும் சிறு தொகையை, மாதவட்டி பெறும் வகையில் வங்கிகளில் உள்ள நிரந்தர வைப்புத்தொகையில் முதலீடு செய்கிறார்கள். சமீபகாலமாக பொதுத்துறை வங்கிகள், சிறுசேமிப்பு மற்றும் நீண்ட கால வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தைப் பெருமளவு குறைத்துவிட்டன. நாள்தோறும் விலைவாசி ஏறிக்கொண்டே இருப்பதால் செலவுகளும் கூடியுள்ள நிலையில் சேமிப்புக்கான வட்டியும் குறையும்போது பலர் பாதிக்கப்படுகிறார்கள்.
உலகளவில், வளர்ச்சியடைந்த நாடுகளில் வங்கிகள் திவாலான போதும் நமது நாட்டில் உள்ள வங்கிகள் இன்றளவும் வலுவாக நிற்பதற்கு பொதுத் துறை வங்கிகளில் உள்ள ஏழை எளிய மக்களின் அதிகளவு சேமிப்புத் தொகையே காரணமாகும்.
பொதுத்துறை வங்கிகளில், ஏறக்குறைய 120 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குப் பொதுமக்களின் வைப்புத்தொகை உள்ளது. 1947 முதல் 1969 வரை, 559 தனியார் வங்கிகள் திவாலாகி, ஏழை எளிய நடுத்தர மக்களின் பணம் பெருமளவில் பறிபோனது. பொதுத்துறை வங்கிகளில் வைப்புத் தொகைக்கு முழு பாதுகாப்பு உள்ளது என்பதால் இம்மக்கள் இவ்வங்கிகளை பெரிதும் நம்பியுள்ளனர். ஆனால் மத்திய அரசின் நடவடிக்கை இம்மக்களை ஏமாற்றும் வகையில் உள்ளது. எனவே வங்கி சேமிப்பு மற்றும் நீண்டகால வைப்புத் தொகைகளுக்கு வழங்கும் வட்டி விகிதத்தை உடனடியாக அதிகரிக்க வேண்டும்.
===இரா.எத்திராஜன்===