“பொது மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் நியூசிலாந்தை போல தமிழகத்திலும் கொரோனா வைரசை இல்லாமல் ஆக்கிவிடலாம்” என கூறி இருக்கிறார் அமைச்சர் உதயகுமார்.
தமிழகத்தில் வைரஸ் தொற்று ஜெட் வேகத்தில் அதிகரித்து கொண்டுள்ளது. இந்தியாவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த சூழலில் மக்களுக்கு நம்பிக்கை தரும் விதத்தில் பேசுவது தவறாகாது. முதல்வர் சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் தொற்று பூஜ்யத்திற்கு வந்துவிடும் என கூறினார். இப்பொழுது வருவாய் அமைச்சர் நியூசிலாந்தை உதாரணம் காட்டுகிறார். நம்பிக்கை தருவது எனும் பெயரில் தவறான தகவல்கள் அல்லது தகவல்களை மூடி மறைப்பது பயன்படாது. தமிழக அரசாங்கம் அவ்வாறு செய்கிறதா எனும் கேள்வி எழாமல் இல்லை.
நோய் தொற்று தடுப்பதில் அரசாங்கத்தின் கடமையும் உள்ளது; மக்களின் பொறுப்பும் உள்ளது. அரசாங்கத்தின் கடமைதான் அடிப்படையானது. ஆனால் தமிழக ஆட்சியாளர்கள் பழியை மக்கள் மீது போடவே முயல்கின்றனர். முதலில் தில்லியில் நடந்த மத மாநாடுதான் தொற்றுக்கு காரணம் என தினமும் கூறப்பட்டது. பின்னர் கோயம்பேடு சந்தை வணிகர்கள் செவிமடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. இப்பொழுது மக்கள் ஒத்துழைப்பு இல்லை என பேசப்படுகிறது.
நியூசிலாந்து எப்படி கொரோனா வைரசை விரட்டியது எனும் அனுபவத்தை தமிழகத்துக்கு பயன்படுத்துவது தவறாகாது! நியூசிலாந்தின் மக்கள் தொகை சுமார் 50 இலட்சம். தற்போதைய சென்னை நகரின் மக்கள் தொகையைவிட குறைவானது. எனினும் நியூசிலாந்து தொழிலாளர் கட்சியின் அரசாங்கம் எடுத்த சில நடவடிக்கைகள் நல்ல பலன்களை அளித்தன.
காலத்தே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு
மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் நியூசிலாந்தில் வைரஸ் தொற்று நூறுக்கும் குறைவாகவே இருந்தது. எனினும் எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன. ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஏன் ஊரடங்கு என்பதும் அரசாங்கம் என்ன செய்யும் என்பதையும் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் குறித்து மிக விரிவாக விழிப்புணர்வு உருவாக்கப்பட்டது. இதன் விளைவாக 96% பேர் ஊரடங்கை அமலாக்கினர். சுமார் 4% மீறினர். அவர்கள் காவலர்களால் தாக்கப்படவில்லை; மாறாக அவர்களுக்கு மேலும் ஊரடங்கின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஊட்டப்பட்டு புரிதல் உருவாக்கப்பட்டது. வைரசை கட்டுப்படுத்துவதில் மேற்கத்திய நாடுகளை நியூசிலாந்து பின்பற்றவில்லை. மாறாக ஆசிய நாடுகளான சீனா/ தாய்லாந்து/ தென் கொரியா ஆகிய தேசங்களின் அனுபவத்தை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
ஆனால் தமிழகத்தில் என்ன நடந்தது?
மார்ச் இறுதிவரை சட்டமன்றம் நடந்தது.எதிர்கட்சிகள் வற்புறுத்தியும் கூட சட்டமன்ற கூட்டம் நிறுத்தப்படவில்லை. தமிழக அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்ககள் எழுந்தன. எதிர்கட்சிகள் சட்டமன்றத்துக்கு செல்வது இல்லை என முடிவு எடுத்தனர். அதன் பிறகுதான் சட்டமன்றம் நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டன. இதற்கிடையே வெளிநாடுகளில் இருந்து வந்த அனைத்து பயணிகளும் பரிசோதனை செய்யப்படவில்லை. இதன் விளைவாக வெளிநாடுகளிலிருந்து வந்த வைரஸ் தமிழகத்தில் நுழையும் ஆபத்து ஏற்பட்டது.
ஊரடங்கு எப்படி பயன்படுத்தப்பட்டது?
ஊரடங்கு காலகட்டத்தில் பரிசோதனை/ தொற்று தொடர்புகளை கண்டு பிடித்தல்/ தனிமைப்படுத்துதல் ஆகிய செயல்பாடுகளை மிக தீவிரமாக நியூசிலாந்து அரசங்கம் செய்தது. நியூசிலாந்தில் 1000 பேரில் சுமார் 59.68 பேர் பரிசோதனை செய்யப்பட்டனர். சளி அல்லது இருமல் உள்ள எவர் ஒருவரும் அரசு மையத்துக்கு வந்து பரிசோதனை செய்துகொள்ள வழிவகை செய்யப்பட்டது. அறிகுறி இல்லாதவர்கள் சோதனை செய்துகொள்வதற்கும் தடை இருக்கவில்லை. தொற்று தொடர்புகளை கண்டுபிடிக்க சிறப்பு செயலிகள் உருவாக்கப்பட்டன. இதன் மூலம் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 80% பேரை கண்டறிவதில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் இடங்களில் தனிமையில் வைக்கப்பட்டனர். அனைத்து வசதிகளும் அளிக்கப்பட்டன. அனைத்து சிகிச்சை செலவையும் அரசாங்கமே ஏற்றுக்கொண்டது.
தமிழகத்தின் நிலை என்ன?
07.06.2020 தேதியின் படி தமிழகத்தில் 1000 பேருக்கு 6.4 பேர்தான் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளனர். நியூசிலாந்து செய்த சோதனைகளில் இது 9ல் ஒரு பங்குதான்! பரிசோதனை செய்வதில் உள்ள சுணக்கம் குறித்து பல்வேறு செய்திகள் தமிழகத்தில் உள்ளன. 8 கோடி பேர் கொண்ட தமிழகத்திற்கு சுமார் 75 பரிசோதனை மையங்கள்; ஆனால் 50 இலட்சம் மக்கள் கொண்ட நியூசிலாந்தில் 120 சோதனை மையங்கள் உருவாக்கப்பட்டன. தமிழகத்தில் தொற்று தொடர்புகளை கண்டறிவதில் பல பலவீனங்கள் இன்றும் தொடர்கின்றன. தனிமைப்படுத்தும் இடங்களில் தொடக்கத்தில் இருந்த சிறப்பான சேவை தற்பொழுது இல்லை எனும் புகார்களும் உள்ளன. 1000க்கும் குறைவாக தொற்று இருந்த பொழுதே சமூக பரவல் கட்டத்திற்கு சென்றுவிட்டது என நியூசிலாந்து பிரதமர் அறிவித்தார். ஆனால் தமிழகத்தில் இன்றுவரை இந்த உண்மையை அங்கீகரிக்க அரசாங்கம் மறுக்கிறது. நியூசிலாந்தில் வைரசுக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து மக்கள் மற்றும் எதிர்கட்சிகளின் ஒத்துழைப்பும் பெறப்பட்டது. எதிர்கட்சி தலைவர்கள் மருத்துவர்களா எனும் அதிர்ச்சியான கருத்துகள் தமிழக முதல்வரால் முன்வைக்கப்பட்டது.
மருத்துவ பாதுகாப்பை உத்தரவாதப் படுத்திய பொருளாதார பாதுகாப்பு
கோவிட் 19 வைரசுக்கு எதிரான போராட்டத்தில் மருத்துவ பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதில் பொருளாதார பாதுகாப்புக்கு முக்கிய பங்கு உண்டு. நியூசிலாந்து எடுத்த சில பொருளாதார நடவடிக்கைகள்:
1. பொருளாதார நிவாரணத்திற்கு 12.1 பில்லியன் டாலர்கள் அதாவது 87,000 கோடி ரூபாய் திட்டம். (வெறும் 50லட்சம் பேருக்கே இவ்வளவு பெரிய தொகை!)
2. பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க நிறுவனங்களுக்கு குறிப்பாக சிறு தொழில்களுக்கு 97% ஊதிய மானியம் கிட்டத்தட்ட 35,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
3. இதன் விளைவாக 89% நிறுவனங்கள் பாதுகாக்கப்பட்டன.
4. வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள பணியாளர்களுக்கு 126 மில்லியன் டாலர்கள் அதாவது 910 கோடி ரூபாய் ஊதிய உதவி.
5. 55000 சிறு தொழில்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் கடன் திரும்ப செலுத்த தொடங்கலாம்.
6. சிறு/குறு தொழில் நிறுவனங்களுக்கு சுமார் 3 பில்லியன் டாலர்கள் அதாவது 21,000 கோடி ரூபாய் வரி திரும்ப அளிக்கப்பட்டது. இதன் மூலம் உற்பத்தியை உடனடியாக தொடங்க வழிவகை உருவாக்கப்பட்டது.
7. கோவிட் வைரசுக்கு பின்னர் உருவாகும் சூழலுக்காக தேவைப்படும் தொழில் பயிற்சிகள் அனைத்தும் அனைத்து வயதினருக்கும் இலவசம் என அறிவிப்பு.
8. இந்த கொள்ளை நோயால் எவரும் வேலை இழப்புக்கு ஆளாவதை தடுக்க அரசாங்கம் உறுதி.
9. குளிர்காலத்தில் வீடுகளுக்குள் வெப்ப சூழலை உருவாக்கும் மானியம் இரட்டிப்பு.
10. சுற்றுச்சூழலை பாதுகாக்க கணிசமான நிதி ஒதுக்கீடு மற்றும் 11000 வேலைவாய்ப்புகள்.
11. இரவு பள்ளிகள் அமைத்தல்.
12. ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு.
13. கோவிட் வைரஸ் உருவாக்கிய பொருளாதார பிரச்சனைகளை எதிர்கொள்ள தனி பட்ஜெட்.uபட்ஜெட்டின் மையமான அம்சம் வேலை வாய்ப்புகள்.
இப்படி ஒரு கணிசமான பொருளாதார பாதுகாப்பை மையமாக வைத்துதான் நியூசிலாந்து வைரசை எதிர்கொண்டது. தமிழக அரசாங்கம் பொருளாதார உதவிகளை செய்திருந்தாலும் மக்களின் தேவையை ஒப்பிடும் பொழுது அது மிக மிக குறைவு. எனவேதான் உழைப்பாளிகள் தமது வாழ்வாதாரத்திற்காக ஊரடங்கு காலத்திலும் வெளியில் வரவேண்டிய அவசியம் ஏற்பட்டது.கடந்த 17 நாட்களாக ஒரு தொற்று கூட இல்லை. எனினும் நியூசிலாந்தின் பெண் பிரதமர் ஜெசிந்தா ஆட்ரென் கூறுகிறார்:
“மீண்டும் இந்த வைரஸ் தலையெடுக்கலாம்; அதன் பொருள் நாம் தோல்வி அடைந்தோம் என்பது அல்ல. நாம் வென்றுள்ளோம்; வெல்வோம்.”
இந்த புரிதலும் தன்னடக்கமும்தான் நல்ல ஆட்சியாளர்களின் இலக்கணம். நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆட்ரென் அவர்களுக்கு கேரளாவில் நிறைய நண்பர்கள் குறிப்பாக குழந்தைகள் நண்பர்களாக இருக்கிறார்களாம். இயற்கை அழகு கொஞ்சும் கேரளாவுக்கு ஒரு நாள் வருவேன் என கூறியுள்ளார். 17வது நாளாக தொற்று ஒன்று கூட இல்லை என அறிந்தவுடன் ஜெசிந்தா ஆட்ரென் மகிழ்ச்சியில் நடனமாடி விட்டாராம். இந்த மகிழ்ச்சிக்கு அவர் தகுதியானவர் என்பதை யார்தான் மறுக்க முடியும்?
நியூசிலாந்தை போல தமிழகத்திலும் வைரசை தடுக்க வேண்டும் எனில் தமிழக அமைச்சர்கள் தற்புகழ்ச்சியையும் எதிர்கட்சிகளை சிறுமைப்படுத்துவதையும் கைவிட வேண்டும். மக்கள் மீது பழி போடாமல் தமது கடமையை பொருத்தமாக செய்ய வேண்டும். நியூசிலாந்தின் அனுபவத்தை ஆய்வு செய்து அந்த அனுபவத்தை அமலாக்க முயல வேண்டும். உண்மையில் நியூசிலாந்து அனுபவம் தமிழகத்துக்கு மட்டுமல்ல; இந்தியா முழுமைக்கும் பலன் அளிக்கும்.