tamilnadu

img

வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுப்போம்!

‘பெண்களைப் பாதுகாப்போம்’என்றுமீண்டும் வெட்கமில்லாமல் பிரச்சாரத்தில் பேசுகிறார்கள்பாஜக- அதிமுக தலைவர்கள். ஆனால் இவர்கள்உண்மையில் எப்படிப்பட்டவர்கள்? இவர்கள் இந்தத் தேர்தலில் மீண்டும் மீண்டும் அம்பலப்படுத்தப்பட வேண்டியவர்கள்.பாஜகவின் முக்கியப் புள்ளிகள், பிரமுகர்கள்உள்பட பாலியல் குற்றங்களில் குற்றவாளிகளாகநிற்கிறார்கள். இப்போது கூட துடியலூரில் 1வதுவகுப்பு படிக்கும் குழந்தை பாலியல் வன்முறைசெய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டதில் கைதாகி உள்ள சந்தோஷ், ஏற்கனவே இந்து மக்கள் கட்சியிலிருந்து இப்போது சங்பரிவார அமைப்பில் ஒன்றான பாரத்சேனாவில் செயல்படுகிறார், என்றதகவல் ஊடகங்கள் மூலமாக வெளிவந்துள்ளது. காஷ்மீரில் கத்துவா கிராமத்தில் 8 வயதுசிறுமி தொடர்ச்சியாக கும்பலால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டு போதை மருந்துகள் செலுத்தப்பட்டு கடைசியாக கல்லால் தலையில் அடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம், இந்தியாவின் மனசாட்சியை உலுக்கிய விசயம். இந்த கொடுமையான குற்றத்தில் குற்றவாளிகளை கைது செய் என்ற குரல்கள் இந்தியா முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒருசில குரல்கள் குற்றவாளிகளை பாதுகாப்பதற்காக உயர்ந்தன. அந்த குரல்களில் மிக முக்கியமான குரல்கள் ஜம்மு- காஷ்மீர் அமைச்சரவையில் பாஜக அமைச்சர்களாக இடம் பெற்றிருந்த இருவர். குற்றவாளிகளை பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட ஊர்வலத்தில் முன்வரிசையில் கோஷம் போட்டு கொண்டு அவர்கள் சென்றார்கள். 


உன்னாவ் என்ற இடத்தில் ஒரு பாஜக எம்.எல்.ஏ ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ததைப் பற்றி புகார் கொடுத்த தந்தையை அவர்கள்அடித்தே கொன்றனர். சாக்சி மகாராஜ் என்ற பாஜக எம்.பி மீதும் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் உண்டு. பாஜக ஆதரவு போலிச் சாமியார் ஆசாராம் பாபுஅவரது ஆசிரமத்தில் இருந்த இரண்டு பெண்களை தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவு செய்தார்என்று புகார் கொடுக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று தற்போது சிறையில் இருக்கிறார். அவர் கைது செய்யப்பட்ட போதுபாஜகவின் தலைவர்கள், நிதியமைச்சர் உள்பட இவரை கைது செய்ததன் மூலமாக இந்து கலாச்சாரமே பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது என்று கூப்பாடு போட்டார்கள். பல மாநிலங்களில் புள்ளி விபரங்களை எடுத்துப்பார்த்தால் தற்போது வேட்பாளராக நிற்கக்கூடிய பாஜக பிரமுகர்கள் பலர் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுக் குற்றவாளிகளாக, குற்றம் சாட்டப்பட்டவர்களாக அல்லது தண்டனை பெற்றவர்களாக இருக்கிறார்கள்.பெண்ணை சமமாக பார்க்கக் கூடிய பார்வைஇந்துத்துவாவிற்கு கிடையாது. உதாரணமாக வங்கதேசப் பிரதமர் பெண்ணாக இருந்தாலும் கூட தீவிரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டோம் என்று பிரகடனம் செய்திருக்கிறார் என்று சொல்லி மோடி அவர்கள் புகழ்ந்து இருக்கிறார். தீவிரவாதத்தை ஆண்கள்தான் எதிர்க்க முடியுமா? பெண்கள் எதிர்க்க முடியாதா? ‘பெண்ணாக இருந்தாலும்’ என்ற வார்த்தை அங்கே ஏன் வரவேண்டும்? 


அதே போல் கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா, வெளிநாட்டிலிருந்து வரக்கூடியபெண்கள் இந்தியாவில் விமான நிலையத்தில் வந்து இறங்கும் போது அவர்கள் செய்யக்கூடியது- செய்யக்கூடாதது என அவர்களிடத்தில் ஒரு பட்டியலை கொடுக்கப் போவதாக பேசுகிறார். அதில் செய்யக்கூடாததில் இரவு நேரத்தில் பெண்கள் வெளியில் இருக்கக்கூடாது; குட்டைப் பாவாடை அணியக்கூடாது என்ற விசயங்கள் இடம் பெற்றுள்ளது. பெண்ணின் மீதான பாலியல் வன்முறைக்கு பெண்ணின் உடைதான் காரணம்; பெண் இரவு நேரத்தில் செல்வது தான் காரணம்; பெண் ஆண் நண்பர்களோடு இருப்பது தான் காரணம் என்றுதொடர்ச்சியாக பெண்ணின் மீது பழி போடுகிறஇழிவான குற்றச்சாட்டுகளைத்தான் பாஜகதலைவர்கள் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத், திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம்; அதில் மனைவியின் கடமை என்பது வீட்டை பராமரிப்பதும், கணவனை மகிழ்விப்பதும் என்ற முறையில் சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்ட ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலில்தான் பாஜக அரசுசெயல்படுகிறது. அதனால் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாதிப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில், வன்முறையை தூண்டுகிற விதத்தில்,குறிப்பாக சிறுபான்மை பெண்கள், தலித்பெண்கள் வன்முறைக்கு அதிகம் இலக்காகும்விதத்தில் பாஜகவின் சித்தாந்தம் இருக்கிறது. செயல்பாடு இருக்கிறது. ஆகவே பாதிக்கப்படுகிற பெண்கள் மட்டுமல்ல; பெண்கள் சமமாகநடத்தப்பட வேண்டும் என்று நினைக்கும் யாருமேபாஜக அதிமுக அணிக்கு வாக்களிக்கக் கூடாது.


பெண்கள் ஏன் மோடி - எடப்பாடி கூட்டணிக்கு வாக்களிக்கக் கூடாது என சொல்வதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. பாலியல் ரீதியிலான கொடுமைகளை பெரும்பாலும் பெண்கள் மட்டுமே சந்தித்து கொண்டிருக்கிறார்கள் எனச் சொல்லலாம். ஆகவே பெண்கள் மீதான ஒடுக்குமுறை என்பது பாலியல் ரீதியிலான பிரச்சனை மட்டுமல்ல; ஒரு உழைப்பாளியாக, ஒரு குடிமகளாக சந்திக்கக்கூடிய எல்லா பிரச்சனைகளும் பெண்ணுக்கு உண்டு. அந்த முறையில் பார்த்தால் வேலைவாய்ப்பு என்பது பெண்ணுக்கு மிகவும் தேவையான ஒன்று. பெண்ணுடைய விடுதலைக்கு முன்நிபந்தனையாக பொருளாதார சுதந்திரம் இருக்கிறது.அதனால் வேலைவாய்ப்பு ஆண்கள், பெண்கள் இருவருக்கும் தேவை என்று சொன்னாலும், பெண்களுக்கு சொந்தக்காலில் நிற்பதற்கு அது நிச்சயமாக மிகமிக தேவை. 2018 ஓராண்டில் மட்டும் மோடியின் ஆட்சியில் ஒரு கோடியே11 லட்சம் வேலை வாய்ப்புகள் பறிக்கப்பட்டதாகவும் அதில் 88 லட்சம் வேலை வாய்ப்புகள் பெண்களுடையது என்றும் இந்தியபொருளாதார கண்காணிப்புமையம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. அதே போல் கிராமப்புறத்தில் ஒன்றரைக் கோடி விவசாயக் குடும்பங்கள் இக்காலகட்டத்தில் வேலையிழந்துள்ளார்கள். ஆகவே நகர்ப்புற பெண்களானாலும் கிராமப்புற பெண்களானாலும் வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுக்க நினைத்தால் நிச்சயமாக மோடி, எடப்பாடி அணிக்கு அவர்கள் வாக்களிக்கக் கூடாது.



பாலின சமத்துவ பட்ஜெட் வேண்டும்


பட்ஜெட் போடும் போது பாலின சமத்துவ பட்ஜெட் போட வேண்டும் என்று சொல்கிறோம். சமூக நலத்துறையில் மட்டும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டாலே போதும்; அல்லது பெண்களுக்கான சில திட்டங்கள் வகுக்கப்படும் போது அதுக்கு நிதி ஒதுக்கீடு செய்தாலே போதும் என்பது கிடையாது. பெண்கள் எல்லா துறைகளிலும் இருக்கிறார்கள். எல்லா பகுதி மக்களிலும் சரிபாதியாக பெண்கள் இருக்கிறார்கள். அதனால் எந்த துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்தாலும் அதில் குறிப்பிட்ட சதவீதம் அதிலிருக்கக்கூடிய பெண்களின் நலனுக்கானதாக இருக்கவேண்டும். அதுதான் பாலின சமத்துவ பட்ஜெட். இதை நீண்ட காலமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது. புதிய சட்டங்கள் வரவேண்டும் என்பது சிபிஎம் தேர்தல் அறிக்கையில் இருக்கிறது. 33 சதவீத இடஒதுக்கீடு சட்டமாக்கப்பட வேண்டும்; அதே போல பெண்களையும் குழந்தைகளையும் கடத்துவதை - அதாவது வேலைக்காக இருந்தாலும், பாலியல் சுரண்டலுக்காக இருந்தாலும் - இதை தடுப்பதற்கு தனியாக கறாரான சட்டம் வேண்டும்; அதேபோல திருமணத்திற்கு பின் சேரக்கூடிய சொத்துக்களில் மனைவிக்கும் சமபங்கை உறுதிப்படுத்தக் கூடிய ஒரு சட்டம்; ஜீவனாம்சம் என்பது பெரிய பிரச்சனையாக உள்ளது. நீதிமன்ற வாசலுக்கு நூறுமுறை பெண்கள் அலைவது ஜீவனாம்சம் பெறுவது தொடர்பான இழுத்தடிப்பில்தான். ஆகவே பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஜீவனாம்சத்தை உறுதிப்படுத்துவதற்கான சட்ட ரீதியான பாதுகாப்பு வேண்டும்; எல்லா மதங்களிலும் கணவனால் கைவிடப்படக்கூடிய பெண்களுக்கு பாதுகாப்பும் ஜீவனாம்சமும் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி சொல்கிறது. 


பெண்களும் குழந்தைகளும்


வர்மா கமிட்டி பரிந்துரையில் சில விசயங்கள் ஏற்கனவே அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பல விசயங்கள் இன்னும் சட்டமாக்கப்படவில்லை. உதாரணமாக கல்விக்கூடங்களில், பாடத்திட்டங்களில் பெண் சமத்துவம் குறித்த கருத்துகள் வர வேண்டும்; பெண்களும் குழந்தைகளும் பல காரணங்களுக்காக பொதுவெளிக்கு வருகிறார்கள்; ஆகவே பொதுவெளியை பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பானதாக மாற்ற வேண்டும் என்று வர்மா கமிட்டி கூறியதை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.


சாதிய வன்முறைகளால்....


சாதிய அடிப்படையில் நடக்கக்கூடிய குற்றங்கள். அதில் சாதி ஆணவக் கொலைகளுக்கு தனியான சட்டம் என்று இருந்தால் கூட தலித் மற்றும் பழங்குடியின பெண்கள் சாதிய ரீதியாக அல்லது குறிப்பிட்ட இடத்தில் இருக்கிறார்கள் என்பதற்காக செய்யப்படக்கூடிய குற்றங்களுக்கு கிடைக்கக்கூடிய தண்டனையை அதிகப்படுத்த வேண்டும். இது போன்ற விசயங்களில் காவல்துறை முறையாக தலையிடவில்லை அல்லது எப்ஐஆர் பதிவு செய்யவில்லை என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் வேண்டும். 


ஒரே இடத்தில்...


பாலியல் வல்லுறவில் பாதிக்கப்பட்டவர்கள், அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடித் தீர்வு கிடைக்காமல், 10 இடத்திற்கு ஓட வேண்டியுள்ளது. ஏதாவது ஒரு இடத்தில், உதாரணமாக மருத்துவமனை என்று சொன்னால் அங்கேயே காவல்துறை வந்து புகார் மனுவை பெற்றுக் கொள்ள ஏற்பாடுகள் செய்ய வேண்டும்; சிகிச்சைகள் அங்கே நடக்க வேண்டும்; அப்பெண்ணுக்கு கொடுக்கப்படும் அரசு உதவித்தொகை அங்கேயே கொடுக்கப்படவேண்டும்: நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கின்ற பெண்களுக்கு ஒரே இடத்தில் எல்லா உதவிகள் கிடைக்க வேண்டும். அந்த மாதிரியான முயற்சிகளை செய்ய வேண்டும்.


பாலியல் குற்றங்கள்...


பெண்கள் மீதான வன்முறை என்று எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு ஒருமுறை இந்தியாவில் ஒரு பெண் பாலியல் வல்லுறவு செய்யப்படுகிறாள். பொதுவாக விபரங்களை வெளியிடாமல் வைத்திருப்பது தங்களை காப்பாற்றும் என்ற முறையில் மோடி அரசு செய்து கொண்டிருக்கிறது. உதாரணமாக வேலையின்மை குறித்த அறிக்கையை வெளியிடவிடாமல் தடுத்தது. அதேபோல விவசாயிகளுடைய தற்கொலை இது சம்மந்தமான தனித்தலைப்பில் விபரங்கள் நமக்கு கிடைத்துக் கொண்டிருந்தது. அந்த விரங்களை கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக மோடி அரசு வெளியிடவில்லை. குற்ற ஆவணங்கள் காப்பகத்தின் புள்ளிவிபரங்கள் ஆண்டுக்கு ஒருமுறை வெளியிடப்படும். கடைசியாக வெளியிடப்பட்ட ஆண்டு 2016 தான். (2016 ஆண்டு பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் உள்பட)2017,2018 அடுத்த இரண்டாண்டுகளுக்கான அறிக்கை வெளியிடப்படவில்லை. 2016 அறிக்கையிலேயே இந்தியா முழுவதும் 39 ஆயிரம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்ற விசயம் மட்டும் தான் உள்ளது. ஆகவே பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பே இல்லாத நாடாக இந்தியா இருக்கிறது. தாம்சன் ராய்ட்டர்ஸ் என்ற நிறுவனம் செய்திருக்கக்கூடிய ஆய்வில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் வரிசையில் முதலிடத்தில் இந்தியா இடம் பெற்றுள்ளது என்பது நிச்சயமாக மோடி ஆட்சியின் வெட்கக்கேடு.


நிலத்திலும் உரிமை தருக!


நிலங்கள் வரைமுறையற்று கையகப்படுத்தப்படுவது மோடி ஆட்சியில் தீவிரமடைந்தது. இங்கு தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் 8 வழிச் சுங்கசாலைக்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட குடும்பங்கள் எப்படி ரோட்டிற்கு வந்தார்கள்; எவ்வளவு பெண்கள் அழுதார்கள்; கதறினார்கள், புலம்பினார்கள் என்று பார்த்தோம். அதையெல்லாம் இரும்புக்கரம் கொண்டுதான் தமிழக அரசு ஒடுக்கியது. நிலங்கள் கையகப்படுத்தும் போது பாதிக்கப்படும் குடும்பங்கள் வீதிக்கு வருகின்றன. அப்படி வீதிக்கு வரும்போது நிச்சயமாக அதில் இருக்கக்கூடிய பெண்களும் குழந்தைகளும் கூடுதல் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். அடுத்து நிலம் கையகப்படுத்தப்பட்டால் ஒருவேளை ஒப்புதலோடு - அதற்கு இழப்பீடு வழங்க வேண்டும். நிலம் யார் பெயரில் உள்ளதோ அவர்கள் பெயருக்கு தான் கொடுக்கப்படும். நமக்கு தெரியும், ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் பெயரில் அநேகமாக நிலம் இருப்பது கிடையாது. பெரும்பாலான பெண்கள் எவ்வளவு தான் உழைப்பை கடந்த காலத்தில் நிலத்தில் செலுத்தியிருந்தாலும் கூட இழப்பீடு அவர்களுக்கு கிடைப்பதில்லை. விவசாயத் தொழிலாளர்கள் நிலத்தை நம்பித்தான் உள்ளார்கள். அப்படி நிலம் கையகப்படுத்தப்பட்டு விவசாயம் தவிர வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படும் போது வேலையிழப்பு ஏற்படுகிறது. அவ்வாறு விவசாய கூலித்தொழிலாளியாக பணியாற்றக்கூடிய பெண்களுக்கும் வேலையிழப்பு ஏற்படுகிறது. அவர்களுக்கும் எவ்விதமான நிவாரணமும் கொடுக்கப்படுவதில்லை.


கண்ணியமாக வாழ...


உதவித்தொகை என்று எடுத்துக் கொண்டால் முதியோர் பென்சன், விதவை பென்சன், மாற்றுத்திறனாளிகள் பென்சன், ஆதரவற்றோருக்கு கொடுக்கப்படும் உதவித்தொகை இவையெல்லாம் தமிழகத்தில் ஆயிரம் ரூபாய் என்று உள்ளது. மத்திய அரசு இதற்கு ஒதுக்கும் நிதியும் குறைவு. மாநில அரசு இதற்கு ஒதுக்கும் நிதியும் குறைவு. இப்போது கூட ஓய்வூதியம் கிடைப்பவர்களுக்கு 2 மாதம் கிடைக்கும்; 4 மாதம் கிடைக்காது. ஆகவே இந்த உதவித்தொகையை உயர்த்துவது ஏறுகின்ற விலைவாசி உயர்வுக்கு ஏற்ப இணைக்கப்படவேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருக்கக் கூடிய முக்கியமான அம்சம். இதை 6000 ரூபாயாக உயர்த்தவேண்டும். விலைவாசி குறியீட்டு எண்ணோடு இது இணைக்கப்பட வேண்டும். பொதுவாக இந்த ஓய்வூதியம் என்பது வயதான காலத்தில் அல்லது தனித்து வாழும் பெண்ணாக இருக்கக்கூடிய பட்சத்தில் கண்ணியமாக வாழுவதற்கு உதவி செய்யும். ஓய்வூதியம் அல்லது உதவித்தொகையின் நோக்கம் இதுதான். 1000 ரூபாயாக வைத்திருப்பது, அனைவருக்கும் கிடைக்கவிடாமல் செய்வது, அல்லது ஒருவருக்கே கூட தொடர்ந்து முறையாக கிடைக்காமல் செய்வது, இந்த மாதிரியான விசயங்கள் சமூகத்தில் ஓரம் கட்டப்பட்ட பெண்கள், முதியவர்கள் கண்ணியமான வாழ்க்கை தேவைப்படுபவர்களாக இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளாத அல்லது அலட்சியப்படுத்துகிற போக்கு. இந்த போக்கில் மோடி அரசுக்கும் பங்குண்டு. எடப்பாடி அரசுக்கும் பங்குண்டு.


வேலை உறுதித் திட்டம்...


மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் பெண்கள் நலனுக்கான சிலமுக்கியமான கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன. 100 நாள் வேலையை பொறுத்தவரை 100 நாள் வேலை என்ற உச்சவரம்பு நீக்கப்படவேண்டும். குறைந்த பட்சம் 200 நாளாவது வேலைகள் கொடுக்கப்பட வேண்டும். அதே மாதிரி இத்திட்டத்தின் கீழ் என்ன மாதிரியான வேலைகளை நாம் செய்யலாம் என்று வரும் போது, வேலைகளை நாம் குறுக்க வேண்டிய அவசியமில்லை; கிராமப்புறங்களில் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த தேவையான எல்லா வேலைகளையும் ஊரக வேலை உறுதிச்சட்டத்தின் கீழ் செய்யக் கூடிய பணிகளாக கொண்டுவரப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதே போல் நகர்ப்புற வேலை உறுதிச்சட்டம் கொண்டுவரப்படவேண்டும். 


இடதுசாரிகளே தீர்வு!


பெண்கள் என்று சொல்லும் போது அவர்கள் ஒரே மாதிரியான பிரிவினராக இல்லை. வர்க்கத்தில் ஏழை, பணக்காரர் என்ற முறையில் பெண்கள் இருக்கிறார்கள். சமூக பின்புலம் என்று பார்க்கும் போது தலித், ஆதிவாசி, சிறுபான்மை பெண்கள் இருக்கிறார்கள். அதே போல் தொழிலாளி வர்க்கத்தில் தொழிலாளிகளாக, விவசாயிகளாக, சிறுதொழில் முனைவோராக இருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரத்யேக பிரச்சனைகள் உண்டு. அவை எல்லாம் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். ஆனால் மத்திய, மாநில அரசுகள் கடைப்பிடிக்கக்கூடிய இந்த நவீன தாராளமயக் கொள்கைகள் இப்படியான பிரச்சனைகளை அதிகப்படுத்துகிறதே தவிர, அதில், குறைப்பதற்கான வழி என்பது இல்லை. அதனால் நவீன தாராளமயக் கொள்கைகளை கடைப்பிடிக்கக்கூடிய இப்படிப்பட்ட அரசுகள் இருக்கும் வரை பெண்களுக்கான பிரச்சனைகள் தீர்வது கடினம். ஆகவே இடதுசாரி மாற்றுப்பாதை பெண்களுக்கு அவசியம்.


தொகுப்பு: ஜி.ராணி