tamilnadu

img

மோடி பென்சன் நம்பர் 1 டுபாக்கூர்

2004-ல் நாடாளுமன்றத் தேர்தலில் 62 இடதுசாரி எம்பிக்கள் வெற்றி பெற்றனர். அகில இந்திய முறைசாரா தொழிலாளர் சமூக பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்படவேண்டும் என்று இடதுசாரிகள் வலியுறுத்தினர். இதை ஏற்றுக்கொண்டு, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு 2008-ல் முறைசாரா தொழிலாளர் சமூக பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றியது. சட்ட அமலாக்கத்திற்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடும் செய்தது. ஆனால் 2014-ல் அமைந்த மோடி அரசில், இந்த ரூ.1000 கோடியையும் செலவிடப்படாமல், நிதி அமைச்சகத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டது. 


அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் ஏகமனதாக முன்வைத்த பல கோரிக்கைகளில் ஒரு முக்கியமான கோரிக்கை; முறைசாரா தொழிலாளர் சமூக பாதுகாப்பு சட்டத்தை அமலாக்க, மத்திய அரசு ஆண்டுதோறும் ரூ.1.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்பதாகும். ஆனால் மோடி அரசு இந்த கோரிக்கை மீது துளியும் அக்கறை செலுத்தவில்லை.


முறைசாரா உடலுழைப்பு தொழிலாளர்கள், முறைசார்ந்த தொழிலாளர் அனைவருக்கும் பொருந்தக் கூடிய வகையில் சமூக பாதுகாப்பு சட்டத் தொகுப்பு ஒன்றை மோடி அரசு முன்மொழிந்தது. இந்த சட்டத் தொகுப்பு சட்டமாக்கப்பட்டால், சமூக பாதுகாப்பு என்பது ஏட்டளவில்தான் இருக்கும். முறைசாரா தொழிலாளர்க்கு வேலைக்கோ, நிரந்தரமான வருமானத்திற்கோ உத்தரவாதமில்லை. எனவே, தொழிலாளர்களின் பங்களிப்பு தொகை இல்லாமலேயே கண்ணியமான சமூக பாதுகாப்பு வழங்கவேண்டும் என்பதே நமது கோரிக்கை.


2019 இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி - 1-ல் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்குப் பிறகு, பிப்ரவரி -7-ல் பிரதான் மந்திரி ஷிரம்யோகி மான் -தன், 2019 என்ற பென்சன் திட்டம் குறித்த அரசு அறிவிக்கை வெளியிட்டது. இது முறைசாரா தொழிலாளர்க்கான பென்சன் திட்டமாம்!

42கோடி முறைசாரா தொழிலாளர் பென்சனுக்காக மத்திய அரசு பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ள தொகை ரூ.500 கோடி மட்டுமே. ஆனால் பசு பாதுகாப்பிற்காக பட்ஜெட்டில் ரூ.750 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மோடி ஆட்சியில் பசுவாக பிறக்காதது நமது குற்றமே?!


18 வயது முதல் 40 வயது வரை உள்ள, மாத வருமானம் ரூ.15000 க்கும் கீழ் உள்ள முறைசாரா தொழிலாளர்களே இந்த பென்சன் திட்டத்தில் உறுப்பினராக சேர முடியும். இவர்கள் மாதாமாதம் ஒருதொகையை வயதுக்கேற்ப ரூ.55 முதல் ரூ.200 வரை அரசின் பென்சன் நிதியில் செலுத்த வேண்டும். அரசும் சமமான தொகையை தனது பங்களிப்பாக செலுத்துமாம். தொழிலாளர் தங்கள் பங்களிப்பை செலுத்தி பென்சன் பெற்றால்தான், தன்மானம் காக்கப்படும் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு பேட்டியில் கதை அளந்துள்ளார். தற்போது தமிழகத்தில் தங்களது பங்காக எதுவும் செலுத்தாமல் 60 வயதில் பென்சன் பெற்று வரும் முறைசாரா தொழிலாளர்க்கு தன்மானம் இல்லை என்பது தானே நிர்மலா சீதாராமனின் கூற்று?


40 வயதுக்கு மேல் உள்ள தொழிலாளிக்கு தான் பென்சன் திட்டம் தேவை. ஆனால் மோடி திட்டமோ 18 முதல் 40 வயது வரை உள்ளவர்க்கு மட்டுமே, முறைசாரா தொழிலாளர்களின் கணிசமானோர் புலம் பெயரும் தொழிலாளர்கள். இவர்கள் மாதாமாதம் எவ்வாறு முறையாக, தங்கள் பங்களிப்பு தொகையை வங்கியில் செலுத்த முடியும்? 18 வயது தொழிலாளி 60 வயதுவரை, அதாவது 42 ஆண்டுகள், 40 வயது தொழிலாளி 20 ஆண்டுகளுக்கு தங்களது பங்களிப்பு தொகையை செலுத்த வேண்டும். இடையில் பணம் செலுத்தத் தவறிவிட்டால், செலுத்த தவறிய காலத்திற்கு மொத்தமாக, அரசு நிர்ணயிக்கும் வட்டித் தொகையுடன் செலுத்தி பென்சன் திட்ட உறுப்பினராக நீடிக்க முடியும். தொழிலாளிக்கு அபராதம் விதிக்கும் மோடி அரசின் ஆணவம் சொல்லிமாளாது. 18லிருந்து 40 வயது வரை உள்ள தொழிலாளி தனது அன்றாட வருமானத்திற்கு என்ன உத்தரவாதம் என்பது குறித்து சிந்திப்பாரா? 60 வயதில் பெறப்போகும் பென்சன் குறித்து சிந்திப்பாரா? 


தற்போது தமிழகத்தில் ரூ.1000 பென்சனாக பெற்றுவரும் முறைசாராத் தொழிலாளர்களின் பென்சன், மோடி அரசின் திட்டத்தினால் ரூ.1 கூட உயரப் போவதில்லை. 42 ஆண்டு, 20 ஆண்டு கழித்து 60 வது வயதில் ரூ.3000 பென்சன் பெறுவது, இன்றைய மதிப்பில் ரூ.500 கூட தேறாது. விலைவாசி உயர உயர மாத பென்சன் ரூ.3000 ஐ உயர்த்தும் திட்டம் அரசிடம் இல்லை.


கணவன் அல்லது மனைவி மோடி அரசின் பென்சன் திட்டத்தில் உறுப்பினராகி, தங்களது பங்களிப்பு தொகை செலுத்தி வரும் காலத்தில், 60 வயதுக்கு முன்னாலேயே இறந்துவிட்டால், மனைவி அல்லது கணவன் தொடர்ந்து 60 வயது வரை பங்களிப்பு செலுத்தி, ரூ.3000 பென்சன் பெற முடியுமாம். அல்லது கணவன் அல்லது மனைவி அரசுக்கு செலுத்திய பணம் மட்டும் கூட்டு வட்டியுடன் திரும்ப பெற்றுக் கொள்ளலாமாம்! அதாவது, அரசு செலுத்தி வந்த சமமான பங்களிப்பு தொகை தொழிலாளிக்கு கிடைக்காது அரசின் பென்சன் நிதிக்கு சென்று விடுமாம்!

18 வயதுள்ள தொழிலாளி 42 ஆண்டுகள் இடைவிடாமல் மாதமாதம் தனது பங்களிப்பு தொகை செலுத்தி வருவது, 40 வயதுள்ள தொழிலாளி 20 ஆண்டுகள் இடைவிடாமல் பங்களிப்பு தொகை செலுத்துவது மிக மிக அபூர்வமானது.


மோடி அரசின் பென்சன் திட்டத்தில் குடும்பம் என்றால் கணவன், மனைவி என்றுதான் வரையறுக்கப்பட்டுள்ளது குழந்தைகளில்லா குடும்பம்; கணவன் பென்சன் பெறும் காலத்தில் இறந்துவிட்டால், மனைவிக்கு குடும்ப பென்சனாக, சரிபாதி பென்சன் கிடைக்குமாம்! மனைவியும் இறந்துவிட்டால், பென்சனையோ தொழிலாளியின் பங்களிப்பு தொகையையோ எதுவும் வாரிசுகளான குழந்தைகளுக்கு வழங்க மாட்டார்களாம்!


அரசு கணக்குப்படி 10 கோடிப்பேர் 18- 40 வயதில் இருப்பார்களாம். சராசரி மாதம் ரூ.100 வீதம், 10 கோடிப் பேர் ஓர் ஆண்டில் பங்களிப்பு செலுத்தும் தொகை ரூ.12 ஆயிரம் கோடி. அடுத்த 20 ஆண்டுகளில் ரூ.2,40,000 கோடி அரசின் பென்சன் நிதிக்கு வந்து சேரும். இத்தொகை கார்ப்பரேட் கம்பெனிகளின் நலன்களுக்கே பயன்படுத்தப்படும். தொழிலாளியின் பங்களிப்பு தொகையும், அரசின் சம பங்களிப்பு தொகையும் சேர்ந்து மொத்த தொகை தொழிலாளிக்கு போய்ச் சேராது. பென்சன் ரூ.3000 மட்டுமே உயிருடன் உள்ளவரை வழங்கப்படும். முறைசாரா தொழிலாளியின் சராசரி ஆயுட்காலம் 65 ஆண்டு மட்டுமே, அதுவுமே கடும் வேலைப்பளு, வாழ்க்கை சிரமங்களால் பலர் 60 வயது வரை உயிரோடு இருப்பதே சந்தேகம். ஆக பென்சன் என்ற பெயரில் அரசு பகற்கொள்ளை நடத்த முடிவு செய்துள்ளது.


ஒரு கோடிப் பேர் திட்டத்தில் சேர்ந்து சராசரி மாதம் ரூ.100 பங்களிப்பு செலுத்தினால், அரசு தனது பங்களிப்பாக ரூ.1200 கோடி செலுத்த நேரிடும். பட்ஜெட்டில் அரசு ஒதுக்கியுள்ளதோ ரூ.500 கோடி மட்டுமே. தொழிலாளி பிரம்மச்சாரி அல்லது விதவையாக இருந்து, பென்சன் திட்டத்தில் சேர்ந்து, பங்களிப்பு தொகை செலுத்தி வரும் காலத்தில் இறந்துவிட்டால், அவர் செலுத்திய மொத்த பங்களிப்பு தொகையும் அரசின் பென்சன் நிதியில் சேர்ந்துவிடும்.


18 வயது தொழிலாளி 42 ஆண்டுகள் தொடர்ச்சியாக மாதம் ரூ.55 வீதம் பங்களிப்பு செலுத்தினால், அரசின் பங்களிப்பு ரூ.55 ஆம் சேர்ந்து, வர்த்தக வங்கியில் தொடர் டெபாசிட்டில் முதலீடு செய்யப்பட்டால், வட்டியுடன் சேர்த்து 60 வயதில் அசல் மட்டும் ரூ.4,48,922 சேரும். இதற்கு மாத வட்டி ரூ.3367 கிடைக்கும். ரூ.3000 பென்சன் போக, தொழிலாளிக்கு ரூ.367 மாதாமாதம் நஷ்டம் மட்டுமல்ல, அசல் தொழிலாளிக்கோ, மனைவிக்கோ, வாரிசுகளுக்கோ, யாருக்குமே சேராது! அரசு முழுங்கி, கார்ப்பரேட்டுகள் ஏப்பம் விடும் நிலை வரும்.

பென்சன் நிதியை தனியார் முதலீட்டுக் கம்பெனியில் முதலீடு செய்தால், நிறுவனம் திவாலாகி, பென்சன் நிதி அதோகதியாகிவிடும்.