tamilnadu

img

எல்ஐசியை தனியாருக்கு விற்கக் கூடாது - டி.கே.ரங்கராஜன்

பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி.கே.ரங்கராஜன்,  பட்ஜெட் மீதான  விவாதத்தில் பங்கேற்று ஆற்றிய உரையின் அம்சங்கள்

நிதியமைச்சரின் நீண்ட உரை சமூகத்தின் எந்தப் பிரிவினர் மத்தியிலும் நம்பிக்கையை உருவாக்கிட வில்லை.  பட்ஜெட்டில் விவசாயம், வேலைவாய்ப்பின்மை, உற்பத்தித் தொழில்கள், கல்வி, சுகாதாரம் என எதன் மீதும் துல்லியமான நடவடிக்கைகள் எதுவும் இல்லை. பொருளாதார மந்த நிலை நீடித்துக் கொண்டிருக்கிறது. என்ன காரணம்? இது தொடர்பாக  அரசாங்கம்  வெள்ளை அறிக்கை சமர்ப்பித்திடுமா?  வெறுமனே  பேசிக்கொண்டி ருப்பதற்குப் பதிலாக பொருளாதார மந்தம் ஏன் என்பது குறித்து அரசாங்கம் வெள்ளை அறிக்கை ஒன்றை ஏன் சமர்ப்பித்திடக் கூடாது? ஆட்சியாளர்களின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை பொருளாதாரத்தைச் சூறையாடிவிட்டது. இதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களோ, இல்லையோ எனக்குத் தெரியாது. இது தொடர்பாக இந்த அரசாங்கம் தவறிழைத்துவிட்டது என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும். நுண்ணிய, சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்கள், ரியல் எஸ்டேட் வர்த்தகம் என அனைத்தும் அழிந்துவிட்டன. ஜிஎஸ்டி அமல்படுத்தும் விதமும் பொருளாதாரத்தின் மீது மேலும் தாக்குதலைத் தொடுத்துள்ளது.

வருமான வரி

வருமான வரி விதிப்பில் புதிய முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். புதிய முறையும், பழைய முறையும் தொடரும் என்றும் தெரிவித்திருக்கிறீர்கள். நான் அரசு ஊழியர்கள் பலரிடம் இதுகுறித்து விசாரித் தேன். யாருமே சந்தோஷமாக இல்லை. பழைய முறையே பரவாயில்லை என்கிறார்கள். புதிய முறையின் கீழ் அவர்களால் முதலீடு செய்ய முடியாது. மக்களின் சேமிப்பு  உங்களுக்குத் தேவையில்லை. அவர்கள் பணத்தைச் செலவு செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால் மக்களின் மனநிலை, எதிர்காலத்திற்காகச் சேமிக்க வேண்டும் என்பதேயாகும். எனவே உங்கள் புதிய முறை வேலை செய்யப் போவதில்லை.

தேசிய கிராமப்புற  வேலை உறுதிச்சட்டம்

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புச் சட்டத்திற்கு, திருத்திய மதிப்பீடுகளின்படி பட்ஜெட் ஒதுக்கீட்டை 7 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து 6,500 கோடி  ரூபாயாகக் குறைத்திருக்கிறீர்கள். எனவே, இது சாமானிய மக்களுக்கு, கிராமத்தினருக்கு, உதவப் போவ தில்லை. “இந்த பட்ஜெட்டானது கிராமப்புற மக்களின் வருமானத்தைப் பெருக்கி, அவர்களின் வாங்கும் சக்தியை அதிகரித்திடும்,” என்று கூறியிருக்கிறீர்கள். எப்படி அவர்களின் வருமானத்தைப் பெருக்கப் போகிறீர்கள், என்று எனக்குத் தெரியவில்லை. உண்மையில் நீங்கள் கார்ப்பரேட் துறையினரின் வருமானத்தை மட்டுமே பெருக்கிக் கொண்டிருக்கிறீர்கள். சமூகத்தின் அனைத்துப் பிரிவினருமே, குறிப்பாக கிராமப்புற மக்கள், கடந்த 17 ஆண்டுகளாக முதலீட்டில் மிகவும் குறைவான வளர்ச்சி காரணமாக, அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். மொத்த உள்நாட்டு உற்பத்தி நிதியாண்டின் ஒவ்வொரு காலாண்டிலும் சுருங்கி இருக்கிறது. நாம் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என்று விரும்பினால் அதற்கு அடுத்த ஐந்தாண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14.4 சதவீதத்தை எட்ட வேண்டும் என்பது பொருளாகும். 

வேலையில்லாதவர்களுக்கு ஊதியம் வழங்கு!

இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிப்பதற்கான மையம் (CMIE-Centre for Monitoring Indian Economy) வெளியிட்டுள்ள தரவின்படி, இந்தியாவில் 2019 அக்டோ பரில் வேலையின்மை 8.3 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இது கடந்த 45 ஆண்டுகளில் உச்சமானதாகும். 2014இல் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைகளை உருவாக்குவோம் என்று உறுதிமொழி அளித்திருந்தீர்கள். இப்போது 2019இல் அதுபோன்று எதையும் நீங்கள் குறிப்பிடவில்லை. இப்போது உங்கள் நிகழ்ச்சிநிரலே வேறு. உங்களால் இரண்டு கோடி வேலைகளை உருவாக்க முடியாது. குறைந்தபட்சம் வேலையில்லாதோருக்கு வேலையில்லா ஊதியம் வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நாட்டில் 4 கோடி பேர், மொத்த மக்கள்தொகையில் 8.3 சதவீதத்தினர் வேலையின்றி இருக்கிறார்கள். அவர்களால் எப்படி வாழ முடியும்? அவர்களுக்கு ஏதாவது தேவை என்றால் அவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களில் பொறியாளர்கள் இருக்கிறார்கள், பட்டயப் பொறியாளர்கள் இருக்கிறார்கள், ஆராய்ச்சிப்படிப்பை முடித்தவர்கள் (பிஎச்டி) இருக்கிறார்கள். இவர்கள் மட்டுமல்லாது +2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் வேலையில்லா கால ஊதியம்  வழங்க வேண்டும். இது உங்களுக்கு புதிதாக இருக்க லாம். ஆனால், இவ்வாறு வேலையில்லா பொறியாளர் கள், பட்டயப் பொறியாளர்கள், ஆசிரியர்கள் வேலையில்லா மல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அவர் களுக்கு வேலைகிடைக்கும் வரை இவ்வாறு வேலையில்லா கால ஊதியம் வழங்க வேண்டும். வேலையில்லா கால ஊதியம் அவர்களுக்கு வேலையில்லா காலத்தில் சற்றே மூச்சுவிட அனுமதித்திடும்.  நீங்கள் வேலைவாய்ப்பை உருவாக்காமல், தொழில் களின் மூடுவிழாக்களை உருவாக்கிக் கொண்டிருக் கிறீர்கள். புதிய வேலைகளே இல்லை. கிராமப்புற சந்தை சுருங்கியிருக்கிறது.  கடலை மிட்டாய்க்குக் கூட ஜிஎஸ்டி வரி விதித்திருக்கிறீர்கள். பொருளாதார வளர்ச்சி ஏற்படும்வரை வேலையில்லாதோர் காத்திருக்கட்டும் என்று நீங்கள் கூறலாம். என்னை மன்னிக்கவும். அவர்களால் அதுவரை காத்துக்கொண்டிருக்க முடியாது.  அவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். 

வேளாண்மை

காவேரிப் பாசனப் பகுதி மாவட்டங்கள் குறித்து  நாங்கள் மிகவும் சங்கடத்திற்கு ஆளாகி இருக்கிறோம். கர்நாடக அரசு, காவேரியின் குறுக்கே அணைகள் கட்டிக்கொண்டிருக்கிறது. எண்ணெய் தோண்டும் வேலை களை விவசாயிகள் எதிர்த்துக்கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு, மாநில அரசு மற்றும்  விவசாய சங்கங்களு டன் 16 அம்சக் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதா என்று எனக்குத் தெரியவில்லை. வங்கி சாரா நிதிநிறுவனங்கள் தாங்கள் அளித்திடும் கடன் தொகைகளுக்கு 22 சதவீதம் வட்டி வசூலிக்கின் றன. ஓர் ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள் விவசாயத்திற்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் செலவு செய்தபின்னர், கடன் பெற்ற நிறுவனங்களுக்கு 22 சதவீத வட்டியை அளிப்பது சாத்தியமில்லை. எனவே அவர்கள் இதிலிருந்து நிவாரணம் வேண்டும் என்று கோருகிறார்கள். உணவு மானியங்களுக்கான செலவினத்தை 8.5 சதவீதம் வரை குறைத்திருக்கிறீர்கள்.

பிபிசிஎல் நிறுவனம் மற்றும் எல்ஐசி நிறுவனங்களை ஒழித்துக்கட்ட விரும்புகிறீர்கள். நாடாளுமன்றத்தில் எல்ஐசி சட்டம் கொண்டுவரப்பட்டு, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டு, எல்ஐசி, 1956இல் நிறுவப்பட்டது.  அதன் மூலம் நாட்டில் இயங்கிக் கொண்டிருந்த 245 இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் சேம நல நிதி சொசைட்டிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, அரசுக்குச் சொந்தமான ஆயுள் இன்சூரன்ஸ் கழகம் உருவானது. 2019 இல், அதன் நிதியின்  மொத்த மதிப்பு 28.3 டிரில்லியன் ஆகும். 2018-19ஆம் ஆண்டில் விற்றுள்ள பாலிசிகளின் மொத்த மதிப்பு 21.4 மில்லியன் ரூபாய் ஆகும். எல்ஐசி 2018-19இல் மட்டும் 26 மில்லியன் பாலிசிதாரர்களுக்கு பணம் கொடுத்துள்ளது. இதனிடம் 290 மில்லியன் பாலிசிதாரர்கள் இருக்கிறார்கள். இந்தப் பாலிசிதாரர்கள் அனைவரும், எல்ஐசியைத் தனியாருக்குத் தாரை வார்த்திட  எடுத்திருக்கும் முடிவை ஏற்கவில்லை. எல்ஐசி ஊழியர்கள் ஏற்கனவே  இந்த முடிவிற்கு எதிராக ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

எல்ஐசியைத் தனியாருக்குத் தாரை வார்க்க ஏன் விரும்புகிறீர்கள்? அரசாங்கம் மேற்கொண்ட அனைத்து ஐந்தாண்டுத் திட்டங்களுக்கும் அவர்கள் நிதி அளித்திருக்கிறார்கள். இதுதொடர்பாக எண்ணற்ற தரவுகள்  என்னிடம் இருக்கின்றன. 1992-97இல் அவர்கள் 56,097 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஐந்தாண்டுத் திட்டத்திற்கும் எல்ஐசி, அரசாங்கத்திற்கு இவ்வாறு வாரி வழங்கியிருக்கிறது. அப்படி இருந்தும் நீங்கள் ஏன் எல்ஐசி-யைத் தனியாருக்குத் தாரை வார்க்க விரும்புகிறீர்கள்?

பிபிசிஎல் நிறுவனமும் விற்பனை 

பண்டிட் ஜவஹர்லால் நேருவை உங்களுக்குப் பிடிக்காதிருக்கலாம். அதனால்தான், அவர் உருவாக்கிய எல்ஐசி-யை, அல்லது பிபிசிஎல் நிறுவனத்தை ஒழித்துக் கட்ட விரும்புகிறீர்களோ என்று நான் புரிந்துகொள்கிறேன்.    உங்களின் முடிவினை எதிர்த்து, பிபிசிஎல் ஊழியர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். இவற்றை யெல்லாம் நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். எல்ஐசி-யைத் தனியாரிடம் தராதீர்கள். பிபிசிஎல்-ஐப் பொறுத்தவரை அரசாங்கம், ஏற்கனவே ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது என்று  செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

அதேபோன்று கல்வி மற்றும் சுகாதாரத்திற்கும் போது மான ஒதுக்கீடு இல்லை. தலித்துகளைப் பொறுத்தவரை, மொத்த மக்கள்தொகையில் அவர்களின் சதவீதம் 16.6 சதவீதமாகும். அவர்களின் மக்கள் தொகைக்கேற்ப பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றால் சுமார் 5.05 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். ஆனால் வெறுமனே 83 ஆயிரம் கோடி ரூபாய்தான் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோன்று, பழங்குடியினர் மொத்த மக்கள்தொகை யில் 8.6 சதவீதமாகும். ஆனால் அவர்களுக்கு பட்ஜெட்டில்  1.76 சதவீத அளவிற்குத்தான் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக் கிறது. இந்த ஒதுக்கீடுகளை அதிகப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தலித்துகள்/பழங்குடியினர்/இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் தொடர்பாக வெளிவந்துள்ள உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து அமைச்சர் தன் கருத்தைக் கூறியிருக்கிறார். அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்கு அரசாங்கத்துறைகளில் உரிய பிரதிநிதித்துவம் இல்லை யென்றால், அவர்களின் வாழ்நிலையில் மாற்றங்கள் ஏற்படாது. பொதுத்துறை நிறுவனங்கள் எதிலும் தலித்/பழங்குடியினர்/இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்த ஒரு தலைவரைக் கூட பார்க்க முடியாது. இதர  சாதிகளைச் சேர்ந்தவர்களால்தான் இப்பதவிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன.   எனவே, வேலையில்லாதவர்களுக்கு ஊதியம் வழங்க  வேண்டும், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்புத்திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீட்டை அதிகரித்திட வேண்டும், என்று நிதி அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். இவற்றைச் செய்வதன் மூலம், ஓரளவுக்கு அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

- தொகுப்பு : ச.வீரமணி