பீகாரில் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் 2 நாட்களில் 36 குழந்தைகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலத்தில் கடந்த மாதம் முதல் மூளைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தற்போது காய்ச்சலுக்கு பலியாகும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாளில் மட்டும் சுமார் 133 குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள னர். இதில், 36 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர் என மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. மேலும் பல குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கூறிய ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.கே. சாகி , “குழந்தைகள் எதற்காக இறந்தார்கள் என்பது பற்றி முறையான ஆராய்ச்சி நடத்த வேண்டும். நாங்கள் கண்டுபிடித்தவரை இறந்த குழந்தைகள் அனைவரும் 90 சதவிகிதம் ரத்தத்தில் குளுகோஸ் குறைந்துள்ளது. இதனால் மற்ற அனைத்து குழந்தைகளும் தனி வார்டில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே கிராமப்புறத்தைச் சேர்ந்த குழந்தைகள்” மாவட்டத்தில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள பெரும்பாலான வார்டுகள் கிராமப்புறங்களில் இருந்து பெரும்பாலும் குழந்தைகளால் நிறைந்துள்ளன. பெரும்பாலும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் என்றார்.
இதற்கு காரணம் மக்களிடம் இந்த நோய் குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தாததே காரணம் என்று முதலமைச்சர் நிதிஷ் குமார் கூறியுள்ளார். சுகாதாரத்துறை அதிகாரிகள் முஸாஃபர்நகரில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.