tamilnadu

img

தூய்மை பணியாளர்களுக்கு முககவசம் பி.ஆர்.நடராஜன் எம்.பி., வழங்கினார்

சுகாதார பணிகளை மேற்கொள்ளும் தூய்மை பணியாளர்களை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் நேரில் சந்தித்து பாராட்டுகளை தெரிவித்துடன், அவர்களுக்கு ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள முககவசங்களை வழங்கினார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதார பணியாளர்களின் உழைப்பு இன்றியமையாததாக உள்ளது. இத்தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் தேவைக்கேற்ப வழங்கப்படவில்லை என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஏற்பாட்டில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள

முககவசங்களை தருவித்து மாநகராட்சி, பேரூராட்சி பகுதியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு புதனன்று பி.ஆர்.நடராஜன் நேரில் வழங்கினார்.
இதன்பின் அவர் தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் தூய்மைத் பணியாளர்களின் ஈடில்லாத உழைப்பை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். உங்கள் சேவையை வெளிப்படையாக பாராட்டும் நிகழ்வு நடந்து வருகிறது. இது எதிர்காலத்திலும் தொடரும் என தான் நம்புவதாகவும், தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கையை வென்றெடுக்க உங்களோடு எப்போதும் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு துணை நிற்கும். அதேநேரத்தில் உங்களது உடல் நலனை பாதுகாத்துக் கொள்ள உரிய முன்னெச்சரிக்கையோடு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார். 

முன்னதாக, துடியலூர், உடையாம்பாளையம், சரவணம்பட்டி, கணபதி, வடகோவை, புலியகுளம், பீளமேடு, ஒண்டிபுதூர் மற்றும் இருகூர் பகுதிகளில் உள்ள தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களை தெரிவித்து முககவசங்களை வழங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலுச்சாமி மற்றும் பாலமூர்த்தி, கே.மனோகரம், ரத்தினகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
(படம் உள்ளது)