பி.ஆர்.நடராஜன் எம்.பி. கண்டனம்
கோவை , ஏப்.24- கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு நடுவே அரசின் இதர துறைகளைப் போன்று ஊடகத்துறை யினர் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு அரசு ஊக்கத் தொகையை தருகிறோம் என ஒருபுறம் அறிவித் துள்ளது. மறுபுறம் விமர்சனத்தை முன்வைக்கும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி கைது செய்வது ஏற்புடையதல்ல. கோவை மாநகராட்சி மற்றும் மாநகர காவல்துறையின் இத்தகைய நடவடிக் கையை கோவை நாடாளு மன்ற உறுப்பினர் என்கிற முறையில் வன்மையான கண்டத்தை தெரிவித்து க்கொள்கிறேன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தெரிவித்து ள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் பணியாற்றும் முதுநிலை மாணவர்களுக்கு உணவும், தண்ணீரும் வழங்கப் படுவதில்லை என்று வெளியான செய்தியையும், மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய ரேசன் பொருட்கள் விநியோகிப்பதில் முறை கேடு நடந் துள்ளதாக சிம்பிள்சிட்டி ஆன்லைன் ஊடகத்தில் செய்தி வெளி யாகி இருந்தது.
இது அரசு ஊழியர்களை அரசுக்கு எதிராக போராடுவதற்கு தூண்டும் வகையில் இருப்ப தாக கூறி கோவை மாநகராட்சி துணை ஆணையர் சுந்தர்ராஜ் என்பவரின் புகாரின் பேரில் (ஏப். 23ஆம் தேதியன்று) வியாழனன்று காலை, சிம்ப்ளிசிட்டி டிஜிட்டல் ஊடகத்தின் செய்தியாளர் ஜெரால்ட் மற்றும் ஒளிப்பதிவாளர் பாலாஜியை விசார ணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், அவர்களை பெரும் குற்றம் செய்த குற்றவாளிகள் போல், யாரையும் சந்திக்கவிடாமல் பல மணிநேரம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து காவல்நிலையத்திற்கு சென்ற கோவை பத்திரிகையாளர்களிடம் கூட அவர்கள் எதற்காக விசாரணைக்காக அழைக்க ப்பட்டார்கள் என்ற காரணத்தை காவல்துறையினர் கூற மறுத்துள்ளனர். இறுதியாக, இரவு 7 மணியளவில், ஜெரால்ட் மற்றும் பாலாஜியை விடுவித்துள்ள காவல்துறையினர், சிம்ப்ளிசிட்டி ஊடகத்தின் உரிமையாளர் சாம்ராஜா பாண்டியனை கைது செய்துள்ளனர். அவர் மீது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் (IPC 188) மற்றும் பொதுமக்களை அரசுக்கு எதிராக தூண்டிவிடுதல் (IPC 505(1)(b)) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைத்து ள்ளனர்.
பத்திரிகைத்துறையை ஜனநாய கத்தின் நான்காவது தூண் என்று அழைக்கிறோம். ஒரு பெருந்தொற்று மக்களின் அன்றாட வாழ்க்கையை முடங்கச்செய்துள்ள நிலையில் ஊடகத்தின் வாயிலாகத்தான் அரசு நிர்வாகத்திற்கும், மக்களுக்கும் செய்திகளை கடத்த முடிகிறது. இவர்கள் விழிப்புடன் செயல்பட்டால்தான், மக்களுக்கு கிடைக்க வேண்டிய சேவைகள் முழுமையாக அவர்களை சென்றடைவது உறுதி செய்யப்படும். இதன் அடிப்படையிலேயே, மருத்துவ மாணவர்களுக்கு ஏற்பட்ட வசதி குறைபாட்டை சுட்டிக்காட்டி சிம்ப்ளிசிட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
தங்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்று மருத்துவ மாணவர்கள் சங்கம், கோவை மருத்துவ கல்லூரியின் தலைவருக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையிலேயே இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல், மக்களுக்கு சென்று சேரவேண்டிய ரேசன் பொருட்கள் திருடுபோவதையும் சுட்டிக்காட்டி சிம்ப்ளிசிட்டி டிஜிட்டல் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆகவே, இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்தின்படி, தனது பணியை செய்த பத்திரிகையாளரை கைது செய்துள்ளது, அரசியல்சாசனத்தை மதிக்காத செயலாகும். இது ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் மறைமுகமாக மிரட்டும் செயலாகும். அடிப்படையில் இது அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறையாகும். ஆகவே தமிழக அரசு மற்றும் காவல்துறை சிம்பிள்சிட்டி ஆன்லைன் ஊடகத்தின் நிறுவனர் சாம் ராஜா பாண்டியன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை திரும்பப்பெற வேண்டும். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு பி.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.