tamilnadu

img

என்ஐஏ திருத்தச் சட்டமுன்வடிவை தெரிவுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்

புதுதில்லி, ஜூலை 18-  தேசியப் புலனாய்வு முகமை (திருத்தச்) சட்டமுன்வடிவை தெரிவுக் குழுவுக்கு அனுப்பவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கே.கே. ராகேஷ் வலியுறுத்தினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் புதன் அன்று தேசியப் புலனாய்வு முகமை (திருத்தச்) சட்டமுன்வடிவின்மீதான விவாதத்தில் பங்கேற்று கே.கே.ராகேஷ் பேசியதாவது: இந்தச் சட்டமுன்வடிவை அரசாங்கம், தெரிவுக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று முதலிலேயே கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் நீங்கள் தேசியப் புலனாய்வு முகமைக்கு மிக அதீதமான அளவில் அதிகாரங்களை வழங்கி இருக்கிறீர்கள். எனவே இதன்மீது நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூர்மையான ஆய்வு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டியது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். இந்தச் சட்டமுன்வடிவு மட்டுமல்ல, இது தொடர்பான முதன்மைச் சட்டமும் கூட நாடாளுமன்ற உறுப்பினர்களின் நுண்ணிய ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும். ஏனெனில் நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் களின் ஆய்வுக்கு ஒரு சட்டமுன்வடிவை அனுப்பும்போது  அது தொடர்பான முதன்மைச் சட்டத்தையும் (Principal Act) சேர்த்து ஆய்வு செய்வதற்காக அனுப்பிட வேண்டும்.

பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் எதிர்ப்பதில்லை
 

தேசப் பாதுகாப்பு என்கிறபோது எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே எவ்வித பிரச்சனையும் கிடையாது. பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் நாம் அனைவரும் ஒன்றுபட்டே நிற்கிறோம். ஆனால், உங்களைப்போல அல்லாமல், நாங்கள் பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் எதிர்க்கிறோம். என்னுடைய குற்றச்சாட்டு என்னவென்றால், நீங்கள் ஒரு குறிப்பிட்ட வடிவத்திலான பயங்கரவாதத்தை மட்டும் எதிர்க்கிறீர்கள். நீங்கள் பயங்கரவாதத்தின் அனைத்து விதமான வடிவங்களையும் எதிர்ப்பதில்லை. நாட்டில் அமலிலிருந்த பல்வேறு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களும் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சமயங்களில், அரசாங்கம் அவற்றை துஷ்பிரயோகம் செய்வதற்கு எதிராக நாங்கள் விமர்சனங்களைச் செய்கிற போது, தயவுசெய்து எங்களை தேச விரோதிகள் என்றும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாளர்கள் என்றும் முத்திரை குத்தாதீர்கள் என்று அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.

துஷ்பிரயோகத்துக்கு நிறைய வாய்ப்பு

இதுதொடர்பான முதன்மைச் சட்டம் உருவாக்கப்பட்ட சமயத்திலேயே இதன் ஷரத்துக்கள் சிலவற்றை நாங்கள் எதிர்த்தோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்து இடதுசாரிக் கட்சிகள் மற்றும் பல்வேறு இதர கட்சிகளும் இதனை எதிர்த்தன. எங்கள் கவலை யெல்லாம் இச்சட்டத்தில் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதேயாகும்.

மாநிலங்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும்
எனவேதான் இதனைக் கொண்டுவரு வதற்கு முன்பாக மாநில அரசுகளுடன் கலந்தாலோசனை செய்திட வேண்டும் என்றும், பல்வேறு மாநிலங்களிலும் நடைபெற்றுவரும் வழக்குகள் குறித்து பல்வேறு மாநில அரசு களுடனும் கலந்து பேச வேண்டும் என்றும் அப்போதுதான் ஒரு நியாயமான நேர்மையான விசாரணையை உத்தரவாதப்படுத்த முடியும் என்றும் கூறுகிறோம். மேலும், மாநில அரசுகளின் கீழ் இயங்கும் உளவுப் பிரிவுகள் அதிக அளவில் தகவல்களைப் பெற்றிருக்கும். எனவேதான் அவற்றையும் கலந்தாலோசிக்க வேண்டும் என்கிறோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இப்போது உள்ள அனுபவம் என்ன?  இந்தச் சட்டத்தின்கீழ் உள்ள எண்ணற்ற ஷரத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப் பட்டிருக்கின்றன. தேசியப் புலனாய்வு முகமை, துரதிர்ஷ்டவசமாக, பல்வேறு (*) குழுக்கள் சம்பந்தப்பட்ட பயங்கரவாத வழக்குகளில், பாரபட்சமான முறையில் செயல்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். மெக்கா மசூதி வழக்கிற்கு என்ன நடந்தது. (குறுக்கீடு).

அவைத் தலைவர்: எந்த மதத்தையும் தயவுசெய்து கொண்டுவராதீர்கள். (குறுக்கீடு). நீங்கள் உங்கள் பேச்சை நிறைவு செய்யுங்கள். (குறுக்கீடு).

கே.கே.ராகேஷ்: * ஒரு மதம் அல்ல. (குறுக்கீடு).

அவைத் தலைவர்: உங்கள் பிரச்சனையைச் சொல்லுங்கள்.(குறுக்கீடு)

மெக்கா மசூதி வழக்கில்...

கே.கே.ராகேஷ்: மெக்கா மசூதி வழக்கிற்கு என்ன நடந்தது? (குறுக்கீடு) தயவுசெய்து தலையிடாதீர்கள். (குறுக்கீடு) அது நான் தொடர்ந்து பேசுவதைத் தடை செய்திடும். (குறுக்கீடு).

அவைத் தலைவர்: இல்லை, இல்லை. கே.கே. ராகேஷ்: மெக்கா மசூதி வழக்கிற்கு என்ன நடந்தது? அஜ்மீர் ஷரீப் வெடிகுண்டுத் தாக்குதல் வழக்கிற்கு என்ன நடந்தது? (குறுக்கீடு) வழிபடும் இடங்கள் தாக்குதலுக்கு உள்ளாகும்போது, அதனைச் செய்த கயவர்கள்மீது வழக்குப் பதிவு செய்யப்படுவதில்லை. (குறுக்கீடு).

அவைத் தலைவர்: இல்லை, இல்லை, (குறுக்கீடு) இது சரியல்ல. எந்த இனத்தின் பெயரும் அவைக் குறிப்பில் இடம் பெறாது. (குறுக்கீடு)

கே.கே.ராகேஷ்: மாலேகான் வெடிகுண்டுத்தாக்குதல் வழக்கிற்கு என்ன நடந்தது?

அவைத் தலைவர்: நீங்கள் சொல்லுங்கள், எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், இனத்தின் பெயரைச் சொல்லாதீர்கள். (But do not take the community’s name.)

அரசு வழக்குரைஞர் என்ஐஏ மீது புகார்
 

கே.கே.ராகேஷ்: அந்த வழக்கை விசாரித்த தேசியப் புலனாய்வு முகமை,  அதில் பிரதானமாகக் குற்றம்சாட்டப்பட்டவர் களைக்கூட குற்றம் எதுவும் செய்யாதவர்கள் எனக் கூறி விட்டுவிட்டது. (Discharged). அதனால் அதன்மீது நீதிமன்றமே தலையிட வேண்டியிருந்தது. (குறுக்கீடு). பிரதானமாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த நபர்கள்மீது நீதிமன்றம் மீண்டும் குற்றச் சாட்டுகளை வனைந்தது. (குறுக்கீடு). அவ்வழக்கை விசாரித்து வந்த அரசுக்குற்றத்துறை வழக்குரைஞரும்கூட தேசியப் புலனாய்வு முகமையானது, இந்த வழக்கில் மென்மை யாகப் போகுமாறு,  தனக்கு நெருக்கடி கொடுப்பதாக,  அதன்  மீது புகார் செய்திருந்தார்.  (குறுக்கீடு).

அந்த வழக்கில் பிரதானமாகக் குற்றம்சாட்டப் பட்டவருக்கு எதிரான பிணை விண்ணப்பத் தினைக்கூட, தேசியப் புலனாய்வு முகமை ஆட்சேபணைக் கருத்து எதனையும் பதிவு செய்து எதிர்த்திடவில்லை. ஏன்? ஏன், அது அவ்வாறு செய்திட வில்லை?

68 அப்பாவி மக்கள் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்ஜூதா எக்ஸ்பிரஸ் வெடிகுண்டுத்தாக்குதல் வழக்கிற்கு என்ன நடந்தது? இவ்வாறு ஒருசில பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக பிரச்சனை என்று வருகிறபோது, அங்கே புலனாய்வு என்பது ஸ்தம்பித்து நின்றுவிடுகிறது. புலனாய்வு நீர்த்துப்போகச் செய்யப்படுகிறது. அதனால்தான், தேசியப் புலனாய்வு முகமை  முழுமையாகத் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று கூறுகிறேன். நீங்கள் மாநில அரசுகளைக் கலந்தாலோசனை செய்தால் இதனைத் தவிர்த்திட சில ஷரத்துக்கள் கிடைத்திடும். மாநில அரசுகளையும் கலந்தாலோசனை செய்வதற்கு வழிவகை செய்யும் விதத்தில் சில ஷரத்துக்கள் இருந்திட வேண்டும் என்று அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.

மாலேகான் வழக்கில் அப்பாவிகள் சிறையில்

சிறுபான்மையினர் குறிவைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மாலேகான் வழக்கில் சிறுபான்மையினர் 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் …

அவைத்தலைவர்: தயவுசெய்து முடியுங்கள். நீங்கள் அனைத்து வழக்கு களையும் குறிப்பிடுங்கள். எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால், இனங்களைக் குறிப்பிடா தீர்கள். இந்த வழியில்தான் பயங்கரவாதிகள் தப்பித்துக்கொண்டுவிடுகிறார்கள்.

கே.கே.ராகேஷ்: அவர்கள் பத்து நாட்களாக சிறையில் இருந்தார்கள். பின்னர் அவர்கள் அப்பாவிகள் என்று மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குறிப்பிட்டச் சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கு வாய்ப்பளிக்கிறது என்பதே கவலைப்பட வேண்டிய விஷய மாகும். கடந்த சில ஆண்டுகளின் அனுபவம் நமக்கு அதைத்தான் காட்டுகிறது. எனவே, அரசாங்கம் இதனை தெரிவுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்றும், ஒரு முறையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். அப்போதுதான் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கான ஒரு வலுவான மற்றும் முறையான சட்டத்தைக் கொண்டுவர முடியும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கே.கே.ராகேஷ் பேசினார்.  (ந.நி.)