பெங்களூரு:
பாஜக முன்னெடுத்து வரும் குறுகிய தேசியவாதம் இந்தியா நாட்டிற்கு ஆபத்தானது என்று விடுதலைப் போராட்ட தியாகியும், காந்தியவாதியுமான எச்.எஸ். துரைசாமி எச்சரித்துள்ளார்.கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரான தியாகி துரைசாமிக்கு தற்போது 102 வயதாகிறது. அந்நிய பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக, துவக்க காலத்தில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்திய துரைசாமி, ஒருகட்டத்தில் காந்தியின் கொள்கைகளால் கவரப்பட்டு, அறவழிப் போராட்டங்களில் தன்னை இணைத்துக் கொண்டு, சிறைச் சென்றவர். பத்திரிகையாளரும் ஆவார். இந்நிலையில், மகாத்மா காந்தியின் 151-ஆவது பிறந்த நாளையொட்டி, காந்தியச் சிந்தனைகள் குறித்து ஊடகங்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.அதில், மக்கள் மனத்திலிருந்து காந்தியின் நினைவை அழிக்கும் முயற்சி, நாட்டில் தற்போது நடந்துவருவதாகவும், அது ஓரளவு வெற்றியையும் கூட பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
“தற்போதைய மத்திய பாஜக அரசு, மிகவும் குறுகிய தேசிய மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகிறது; இந்த அரசு ஒற்றுமையை விட பிரிவினைகளையே அதிகரித்து வருகிறது; இந்தியர்களாகிய நாம் காந்தியப்பாதையை விட்டுவிட்டு, கோட்சேவின்காலத்திற்கு சென்று கொண்டிருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ள துரைசாமி, “மகாத்மா காந்தி உயிருடன் இருந்திருந்தால், விதி எண் 370 விலக்கப்பட்டு, காஷ்மீர் அரசுக்குஅளிக்கப்பட்ட சிறப்பு உரிமைகள் பறிக்கப்பட்டதற்கு எதிராக சத்தியாகிரகப் போராட்டம் நடத்தியிருப்பார்; அதுமட்டுமல்ல, மோடி - இம்ரான்கான் இடையே கூட பேச்சுவார்த்தை நடத்தி,போரற்ற தீர்வுக்கு முயற்சி மேற்கொண் டிருப்பார்” என்றும் கூறியுள்ளார்.“பிரிவினையின்போதே, பாகிஸ்தானுக்கு அளிக்க வேண்டியவற்றை உடனடியாக அளிக்க வேண்டுமென உண்ணாவிரதம் இருந்தவர்தான் மகாத்மா காந்தி” என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.