tamilnadu

img

அரசுத் தேரை சேரிக்கு இழுத்து வந்த தோழர் பி.எஸ். கிருஷ்ணன்

சுமார் 30 ஆண்டு கால அரசுப் பணியில் எனக்கு ஏராளமான கசப்பு அனுபவங்கள் இருந்தன. சில நேரங்களில், அரசு விதிகள் மக்களுக்காக மக்களின் நன்மைக்காக உருவாக்கப்பட்டதா? அல்லது அவர்களின் உரிமைகளை நிராகரிக்க உருவாக்கப்பட்டதா? என்கிற கேள்விகளை நான் எனக்குள்ளேயே கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

ஆனால் தோழர் பி.எஸ். கிருஷ்ணன் அவர்களின் வாழ்க்கைப் பாதையைப் பற்றி முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவியின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களை  நூல்வடிவில் படித்த பிறகுதான் அரசு இயந்திரத்தை மக்கள் சேவைக்காக எப்படியெல்லாம் ஓர் அரசு அதிகாரியால் பயன்படுத்த முடியும் என்பதை உணர முடிந்தது. விடுதலைக்குப் பிறகு இந்திய அரசின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும் இந்திய ஆட்சிப் பணியில் அதன் தொடக்க நாட்களில் சேர்ந்த பலருமே அரசின் வளர்ச்சித் திட்டங்களை நாட்டின் கடைக்கோடி வரையில் கொண்டு செல்வதில் ஆர்வத்தோடு ஈடுபட்டார்கள் என்பது உண்மைதான். அவர்கள் நேர்மையானவர்களாக, தவறென்று பட்டதை வெளிப்படையாக ஆட்சியாளர்களிடம் எடுத்துக் கூறியவர்களாகவே இருந்தனர். 1956-ம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு ஆந்திர மாநிலத்தில் பணிப்பொறுப்பு கொடுக்கப்பட்ட பி.எஸ். கிருஷ்ணன் தனது முதல் வேலையிலேயே, கிராமப்புறத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளுக்கு தீர்வாக நிலச்சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தாக்கத்தின் வழி செயல்பட்டார்.

காலம் காலமாக சமூகத்தின் ஒடுக்குமுறைக்கு ஆளாகி வந்த  தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு அரசு நிலத்தை, ஊருக்குப் பொதுவான நிலங்களை பகிர்ந்து கொடுப்பதில் அவர் முன்னணியில் இருந்ததோடு, கிராமப்புற ஆதிக்க சக்திகளின் எதிர்ப்பையும்,  அவர்களுக்கு பக்கபலமாக இருந்த அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகளின் எதிர்ப்பையும் தேடிக் கொண்டார். அவரது செயல்களுக்கான நற்சான்று அவரது அரசுப் பணித் திறமையை மதிப்பிடும் பொறுப்பில் இருந்த ஓர் உயர் அதிகாரி அவரது பணிப்பதிவேட்டில் எழுதியிருந்த வார்த்தைகளில் வெளிப்பட்டது.  பி.எஸ். கிருஷ்ணன் பற்றி அந்த உயர் அதிகாரியின் மதிப்பீடு இப்படித்தான் இருந்தது: “ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுக்கு அதீதமான  அளவிற்கு சார்பாக நடந்து கொள்கிறார்; கலப்புத் திருமணங்களை பெரிதும் ஊக்குவிப்பவராக இருக்கிறார்; வடமொழியில் தனக்குள்ள அறிவுத் திறனைப் பயன்படுத்தி மத நம்பிக்கைகளை தோலுரிக்கிறார்; கிராமப்புறத்தில் பணிபுரியும் அரசு அதிகாரிகளின் வார்த்தைகளை நம்புவதற்குப் பதிலாக அந்த கிராமத்து மக்களின் நேரடி வார்த்தைகளுக்கே மதிப்பளிக்கிறார்; சமூகத்தில் கலகம் விளைவிக்கும் சக்திகளுக்கு உதவிடும் வகையில் செயல்படுகிறார்.” அரசின் உயர்மட்டத்தில் இத்தகைய எதிர்ப்புகள் எழுந்தபோதிலும், கொண்ட கொள்கையில் தளராது, பொறுப்பு வழங்கப்பட்ட பதவிகள் அனைத்தையும் இந்த லட்சியத்திற்காகவே தனது பணிக்காலம் முழுவதும் செயல்படுத்தி வந்தவர் அவர். (இவரைப் போலவே 1957-ல் இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட எஸ்.ஆர். சங்கரன் அவர்களும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பணியைத் தொடங்கி தன் வாழ்நாள் முழுவதையும் பழங்குடி மக்களின் நல்வாழ்விற்காகவே செலவிட்டவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது)

ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக ஆந்திர மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்காக தீவிர நிலச்சீர்திருத்தத்தினை அமலாக்கிய பி.எஸ்.கிருஷ்ணன் அந்த மாநிலத்தில் வசிக்கும் முஸ்லிம் பிரிவினரில் மிகவும் நலிந்த பிரிவினர், நாடோடி இனத்தவர் ஆகியோரின் நலன்களுக்காகவும் பல்வேறு அரசு விதிகளை உருவாக்கி அமலாக்கியவரும் ஆவார். இந்தியாவிலேயே முதன்முறையாக முஸ்லிம் சமூகத்தில் நலிந்த பிரிவினருக்கு அரசுப் பணிகளில் 3 சதவீத இடஒதுக்கீட்டிற்கான திட்டத்தை ஆந்திரப் பிரதேசத்தில் அறிமுகம் செய்து எண்ணற்ற எதிர்ப்புகளுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் வரை எடுத்துச் சென்று அதைச் சட்டப்பூர்வமாக்கியவரும் அவரே. ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து மத்திய அரசுப் பணிக்குச் சென்ற பிறகும் தன் இலக்கில் கொஞ்சமும் தளராத விக்கிரமாதித்தனாக, சமூக நலத்துறை செயலாளராக மண்டல் கமிஷன் உருவாக்கத்தில் இருந்து தொடங்கி அதன் பரிந்துரையை அமலாக்குவதிலும் தீவிரமாக செயல்பட்டார்.

சமூக நலத்துறையின் அனைத்து சமூக நல நடவடிக்கைகளும் உரியவர்களைச் சென்றடைய வேண்டும் என்பதிலும் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் அவர் உரிய கவனம் செலுத்தி வந்ததன் விளைவே  தாழ்த்தப்பட்ட, பழங்குடி பிரிவினருக்கான நிதி ஒதுக்கீடுகள் தனிப்பிரிவில் ஒதுக்கப்பட்டு அந்த நிதி எக்காரணம் கொண்டும் வேறு நோக்கங்களுக்குப் பயன்படுத்த முடியாத வகையில் பட்ஜெட் ஒதுக்கீட்டிலேயே இப்பிரிவினருக்கான சிறப்புக்கூறுகள் பிரிவை உருவாக்கி சட்டரீதியான மாற்றம் கொண்டுவந்தார். தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான கொடுமைகளுக்கு உரிய தண்டனை வழங்கும் வகையில் தாழ்த்தப்பட்ட , பழங்குடிப் பிரிவினரின் மீதான தாக்குதல்கள் குறித்த தனிச்சட்டத்தை உருவாக்கி அமலாக்கியதில் முன் நின்றவர். 2014-ல் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அச்சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய முயற்சிகள் மேற்கொண்ட போதும், உச்சநீதிமன்றம் அச்சட்டத்தை உயிரற்ற ஒன்றாக மாற்ற முயன்ற போதும் அதற்கு உரிய எதிர்வினைகளை ஆற்றி அச்சட்டம் மீண்டும் உயிர்பெறுவதற்கான முயற்சிகளை பணி ஓய்விற்குப் பிறகும் தொடர்ந்து செய்து வந்தார்.

அரசு நிர்வாகத்தில் வேர்பிடித்து நிற்கும் ஆதிக்க சக்திகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையே அரசியல் அமைப்புச் சட்ட ரீதியான உரிமைகளை ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு உறுதிப்படுத்தும் வகையில் சட்ட முன்வடிவுகளை உருவாக்கி, உரிய தருணத்தில் அவற்றை சட்டமாக மாற்றுவதற்கான ஊக்க சக்தியாக அவரது நீடித்த முயற்சிகள் இருந்தன. குறிப்பாக, தாழ்த்தப்பட்ட, பழங்குடிப் பிரிவினரின் மீதான வன்கொடுமைகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவதாக இன்று திகழும் தாழ்த்தப்பட்ட, பழங்குடிப் பிரிவினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய சாதிய ஆதிக்க சக்திகள் உச்சநீதிமன்றம் வரை சென்ற போதிலும், அதை முறியடிக்கும் வகையில் திருத்தச் சட்டத்தை  இப்போதுள்ள பாஜக அரசைக் கொண்டே  நிறைவேற்றிய பெருமையும் அவருக்குண்டு. இந்தச் சட்டம் இன்றும் உயிரோடு இருக்க காரணமானவர் அவரே.

அம்பேத்கரின் இணையற்ற இலக்கான சாதி ஒழிப்பில் தீவிர நம்பிக்கை கொண்டிருந்த தோழர் பி.எஸ். கிருஷ்ணன் உருவாக்கிய ‘சாதி ஒழிப்பிற்கான சென்னை பிரகடனம்’ இந்தியாவில் சாதி ஒழிப்பை தீவிரமாக மேற்கொள்ள சமூகநீதிக்காகப் போராடும் சக்திகள் அனைத்தும் ஒன்று திரளவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது. அதே போன்று இன்றைய இந்திய சமூகத்தில் உடனடியாகத் தீர்க்க வேண்டிய முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாக சமூகநீதியைக் கருதுபவர்கள் அனைவரின் கவனத்தையும் பெற்ற முனைவர் வசந்திதேவியின் 50 கேள்விகளுக்கு அவரது பதிலாக அமைந்த அவரது வாழ்க்கைப் பயண நூலான “சமூக நீதிக்கான அறப்போர் – பி.எஸ். கிருஷ்ணன்: நலிந்தோர் நலனுக்கான ஓர் வாழ்வின் அர்ப்பணம்” என்ற நூல் முதலில் ஆங்கிலத்தில் வெளியானது. தெலுங்கு, இந்தி, மலையாளம் மொழிகளில் வெளியாகியுள்ள இந்நூல் விரைவில் தமிழிலும் வரவுள்ளது.   

இந்நூலைப் படிக்கும் எவரொருவரும் ஒரு அம்சத்தை மிகத் தெளிவாக உணர முடியும். தோழர் பி.எஸ். கிருஷ்ணன் தன் வாழ்நாள் முழுவதையும் ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்களின் வாழ்வை மாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுத்திக் கொள்வது என்ற ஒரே சிந்தனையோடு செயல்பட்டு வந்தார் என்பதே அந்த அம்சமாகும். அவ்வகை யில் சமூக நீதிக்காக குரல் எழுப்பும் ஒவ்வொருக்குமான பாடத்தை தன் வாழ்நாள் செயல்பாட்டின் மூலம் நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார் தோழர் பி.எஸ். கிருஷ்ணன். அவரது வாழ்க்கையை முன் உதாரணமாகக் கொண்டு நாம் செயல்படும் ஒவ்வொரு அரங்கிலும் சமூக நீதியை நிலைநாட்டச் செய்யும் ஒவ்வொரு முயற்சியுமே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். அதில்தான் அவரது வாழ்வின் பொருளும் அடங்கியுள்ளது.

- வீ.பா.கணேசன்