tamilnadu

img

மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் கண்டனம்                                                   

உலகம் முழுவதும் குரானா என்ற அரக்கனை எதிர்த்து மனிதகுலம் போராடிக் கொண்டிருக்கின்றது.இந்தியா முழுவதும் இருபத்தோரு நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு அனைவரும் வீட்டுக்குள் முடங்கி உள்ளனர். தொழிலாளர்கள் வருமானம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய மாநில அரசுகளால் உரிய நிவாரணம் வழங்க முடியவில்லை .பணிக்கு வராவிட்டாலும் நிறுவனங்கள் ஊதியத்தை கொடுக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாட்டில் என்ன நடக்கிறது என்பதைப்பற்றி புரிந்து கொள்ளாத நிலைமையில் மாநகர போக்குவரத்துக்கழக அதிகாரிகள் உள்ளனர்.

கடந்த மார்ச் 10, 11 தேதிகளில் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரிக்கைக்காக இரண்டு நாட்கள் போராட்டம் நடத்தினர் .போராட்டத்திற்கு பின்பு அரசு மார்ச் 20ஆம் தேதிபேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டது. அதற்குப்பின் ஏற்பட்ட சூழ்நிலையை கருதி  பேச்சுவார்த்தையை ஒத்திவைத்தது. தொழிற்சங்கங்களும் அரசின் நிலையை புரிந்துகொண்டு நாட்டு நலனுக்காக தங்களது கோரிக்கையை வலியுறுத்தவில்லை . தொழிலாளர்கள் எவ்வித எதிர்பார்ப்புமின்றி தமிழகத்தின் பெருநகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு மழை வெள்ள காலத்தில் எவ்வாறு சமூக நோக்கத்தோடு பணிபுரிந்தார்களோ அதேபோன்று இப்போதும் பணிபுரிந்தனர் .தொடர்ந்து அதற்கும் தயாராகவே உள்ளனர்.

ஆனால் இந்த நேரத்திலும் கூட பழிவாங்கும் அடிப்படையிலும் ,வஞ்சிக்கும் அடிப்படையிலும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் நடந்து கொண்டுள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு மூன்று நாட்கள் சம்பளத்தை பிடித்தம் செய்துள்ளது. வார ஓய்வை கூட மறுத்து சம்பளத்தை பிடித்துள்ளது. அதிகாரிகளின் இதுபோன்ற நடவடிக்கை காரணமாகத்தான் போக்குவரத்துக் கழகங்களில் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. கழக அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதும், வேலையே பார்க்காதவர்களுக்கு தொழிலாளர்கள் உழைத்த பணத்தை அள்ளி கொடுப்பதும் அவர்களது லஞ்ச ஊழல் நடவடிக்கைகளுக்கு துணை நிற்பதும் தொடர்ந்து நடைபெற்று கடினமாக பணி புரியும் தொழிலாளர்களை இழிவு படுத்தும் நிலை தொடர்கிறது .

நாட்டின்நிலமையை புரிந்து கொள்ளாத கழக அதிகாரிகளின் வழக்கமானசெயல்பாடு வன்மையாக கண்டிக்கத்தக்கது. மிகப்பெரிய சமூக சிக்கல் எழுந்துள்ள நிலையில் அரசுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தொழிலாளர்கள் தங்களது ஒரு நாள் சம்பளத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்காக அளிப்பதாக கூறினர் .அரசின் நடவடிக்கைகளுக்கு  தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுக்கவும் தயார் என்று அறிவித்த நிலையில்மாநகரப் போக்குவரத்துக் கழக நிர்வாகத்தின் இதுபோன்ற நடவடிக்கை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் தலையிட்டு அதிகாரிகளின் இதுபோன்ற மோசமான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென சிஐடியு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

கே.ஆறுமுக நயினார்
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம், சிஐடியு