அகமதாபாத்:
குஜராத் மாநிலம் சபர்மதியில் 1917 முதல் இயங்கிவரும் காந்தி ஆசிரமத்தைக் கையகப்படுத்தி, குஜராத் பாஜக அரசு கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும், இது ஆசிரமத்தை சீர்குலைக்கும் செயல் என்றும்குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அத்துடன், ஆசிரமம் அமைந்துள்ள 32 ஏக்கர் நிலத்தை தனியார் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு சூறையாடும் திட்டமும் இதன் பின்னணியில் இருப்பதாக காந்தியவாதிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
கடந்த 1917-ஆம் ஆண்டு, குஜராத்மாநிலம் சபர்மதியில் அமைக்கப்பட்டது,சபர்மதி ஆசிரமம் ஆகும். இது அன்றையகாலத்தில் ஹரிஜன் ஆசிரமம் என்றும் அழைக்கப்பட்டது. மயானம் மற்றும் சிறைச்சாலைக்கு இடையிலான தரிசு நிலத்தில், அமைக்கப்பட்டிருந்த இந்த ஆசிரமத்தில், மகாத்மா காந்தி 1917 முதல் 1930 வரை வசித்து வந்தார். காந்தியின் படுகொலைக்குப் பிறகும் தொடர்ந்து இயங்கி வரும் இந்த ஆசிரமத்தில், ஒரு மேல்நிலைப்பள்ளி, ஹரிஜன் பெண்கள் தங்கும் விடுதி, ஆரம்பப்
பள்ளி ஆசிரியைகளுக்கான பயிற்சிப்பள்ளி உள்ளிட்டவை அமைந்துள்ளன. குஜராத் காந்தி கிராமத்யோக் சார்பில்கதர்த் துணிகள் உள்ளிட்ட பல்வேறுகைவினைப் பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுவதுடன், விற்பனையும் நடைபெற்று வருகிறது. தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரத்தையும் சபர்மதி ஆசிரமம் மேற்கொண்டு வருகிறது.
\இந்நிலையில்தான், சபர்மதி காந்திஆசிரமத்திற்கு, அரசு சார்பில் நோட்டீஸ்ஒன்று அனுப்பப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சபர்மதி காந்தி ஆசிரமம் மற்றும் அது நடத்தி வரும் கல்வி நிலையங்கள், அறக்கட்டளை போன்றவற்றை அரசாங்கம் கையகப்படுத்திக் கொண்டு,அதற்கான மதிப்பீட்டுத் தொகையை ஆசிரம நிர்வாகத்திற்கு இழப்பீடாக வழங்கும்தகவல் அந்த நோட்டீசில் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்தச் செய்தி, காந்தியவாதிகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இது ஆசிரமத்தின் சொத்துக்களை மனத்தில் கொண்டு, அவற்றை அபகரிக்க மேற்கொள்ளப்படும் முயற்சி என்று கொதித்துள்ளனர்.சபர்மதி ஆசிரமத்தில், 1917 முதல் 1930 வரை மட்டுமல்ல, இன்றும்கூட பல்வேறு சேவைகளின் வழியாக காந்திவாழ்ந்து கொண்டிருக்கிறார்; அப்படிப் பட்ட ஆசிரமத்தை நிர்மூலமாக்க முயற் சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரனான துஷார் காந்தியும், இந்த செய்தியை குறிப்பிட்டு, குஜராத் அரசின் முயற்சிக்கு டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.“குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்தபோது, ‘மகாத்மா மந்திர்’ என்ற ஒரு வர்த்தக மையத்தை ரூ. 200 கோடி செலவில் மோடி நிறுவினார். அதில், கலைப்பொருட்கள் விற்பனைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் கூறினார். ஆனால், தற்போது அந்த வர்த்தக மையம், தனியாருக்கு விடப்பட்டு, ஹோட்டல் நிர்வாகம் ஒன்று அதனை நிர்வகித்து வருகிறது. சொகுசு ஹோட் டலாக மட்டுமே மகாத்மா மந்திர் அறியப்பட்டு வருகிறது.இவ்வாறு மகாத்மா மந்திரையே சரியாக நடத்த முடியாமல், தனியாருக்கு குத்தகைக்கு விட்டுள்ள குஜராத் அரசு,தற்போது காந்தி ஆசிரமத்தை கையகப்படுத்த முயற்சிக்கிறது” என்றும் காந்தியவாதிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதுமட்டுமல்ல, பிரபல ஹோட்டல் நிறுவனமான லீமா குழுமத்துடன், குஜராத் அரசு 20 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம்ஒன்றைப் போட்டுள்ளது. அதனடிப்படையில், லீமா குழுமத்துக்கான நிலத்தை, குஜராத் அரசு தீவிரமாக தேடி வருகிறது. இந்நிலையில், சபர்மதி ஆசிரமத்தை கையகப்படுத்தும் திட்டத்தை, லீமா குழும ஒப்பந்தத்துடன் இணைத்துப்பார்க்காமல் இருக்க முடியவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.சபர்மதி காந்தி ஆசிரமமானது, 32 ஏக்கர் பரப்பளவைக் கொண்டதாகும். இங்கு ஆசிரம சேவைக்காக காந்தியின் அழைப்பை ஏற்றுவந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களும் மூன்று தலைமுறையாக வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.