tamilnadu

img

விமான நிலையங்களா, இப்போது வேண்டாம்...!

அகமதாபாத்:
லக்னோ, அகமதாபாத், மங்களூரு விமான நிலையங்களின் பராமரிப்பை உடனடியாக பொறுப்பில் எடுத்துக்கொள்ள முடியாது என்று ‘அதானி குழுமம்’ திடீரென பின்வாங்கியுள்ளது.

மத்திய பாஜக அரசானது, விமான நிலையங்களின் பராமரிப்பை கடந்த ஆண்டு தனியாருக்கு ஏலம் விட்டது. இதில், மோடியின் நெருங்கிய நண்பரான கவுதம் அதானி- லக்னோ, அகமதாபாத், மங்களூரு ஆகிய விமான நிலையங்களை ஏலத்தில் எடுத்தார். இதேபோல பெருமுதலாளிகள் பலரும் வெவ்வேறு விமான நிலையங்களை குறிவைத்தனர்.ஆனால், கொரோனா தொற்று முடக்கத்தால், விமானப் போக்குவரத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற சூழல், அவர்களை யோசிக்க வைத்துள்ளது. தாங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்குமா? என்று சந்தேகம் அடைந்துள்ளனர்.

இந்நிலையிலேயே, தாங்கள் ஏலத்தில் எடுத்த விமான நிலையங்களை பொறுப்பேற்று நடத்துவதற்கு, அதானி குழுமம் கு‍றைந்தபட்சம் 6 மாத காலம் அவகாசம் கேட்டுள்ளது.  இதுதொடர்பாக, ‘ஏர்போர்ட் அதாரிட்டி ஆப் இந்தியா’விற்கு கடிதமும் எழுதியுள்ளது.கடந்த 2020 பிப்ரவரி 15 அன்று, லக்னோ, அகமதாபாத், மங்களூரு விமான நிலையங்களை ஏற்பது தொடர்பான ஒப்புதல் ஒப்பந்தத்தில் அதானி குழுமம் கையெழுத்திட்டது. அந்த ஒப்பந்தப்படி, முன்பணமாக ரூ.1500 கோடி செலுத்திய 180 நாட்களுக்குள், அதானி குழுமம், விமான நிலையங்களைப் பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது விதியாகும். ஆனால், அதானி குழுமம் 6 மாதம் குறைந்தபட்ச அவகாசம் கேட்டுள்ளது. கொரோனா நீடிக்கும் பட்சத்தில், அதிகபட்சம் இன்னும் எத்தனை மாதங்கள் கேட்பார்களோ தெரியவில்லை.