தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கைப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகக் கன மழை பெய்யக்கூடும்.
மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, புதுக்கோட்டை மற்றும் தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்தில் தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.