tamilnadu

img

வறுமையை ஒழிக்க வழி தேடிய சக்லத்வாலா... - ப.முருகன்

முதலாளித்துவத்திலிருந்து  கம்யூனிசத்திற்கு  - 2

சாபூர்ஜி சக்லத்வாலா இந்தியாவிலிருந்து இங்கிலாந்து சென்ற பின் தாய்நாட்டுக்கு 3 முறை தான் வருகை புரிந்தார். 1912-13 காலத்தில் முதல் முறையாக குடும்ப நிகழ்வுகள் தொடர்பாகவும் 1913-14ல் இரண்டாவது தடவை தனிப்பட்ட முறையிலும் 1927ல் மூன்றாவது முறை அரசியல் ரீதியாகவும் இந்தியாவுக்கு வந்திருந்தார். இந்த மூன்றாவது முறை பயணத்தின்போதுதான் பல்வேறு மாநாடுகளிலும் பொதுக்கூட்டங்களிலும் வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். அவருக்கு பல்வேறு நகரங்களில் உற்சாகமான பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த சமயத்தில்தான் சென்னைக்கும் வருகை தந்து பல்வேறு கூட்டங்களில் உரையாற்றினார். 

அவர் இங்கிலாந்தின் தொழில்நகரமான மான்செஸ்டர் வந்த பின் அங்கு தொழிலாளர்கள் மத்தியிலும் காலனி நாடுகளின் விடுதலை தொடர்பான நிகழ்வுகளிலும் தீவிரமாக பங்கேற்றார். செல்வந்த முதலாளி குடும்பத்தில் பிறந்த அவரது அரசியல் பயணம் சோசலிசத்தை நோக்கி ஈர்க்கப்பட்டது பற்றி இங்கிலாந்தின் கம்யூனிஸ்ட்  தலைவர்களில் ஒருவரான ரஜினி பாமிதத் புகழ்ந்துரைத்துள்ளார்.

சக்லத்வாலா பலமுனைகளில் செயல்படும் வீரமிக்க பிரபலமான தலைவராகத் திகழ்ந்தார். சர்வதேச கம்யூனிசம், இந்திய தேசிய விடுதலை மற்றும் பிரிட்டிஷ் தொழிலாளர் வர்க்க இயக்கம் ஆகியவற்றில் மிகுந்த செயலூக்கத்துடன் செயல்பட்டார். பிரிட்டிஷ் தொழிலாளர்களால் மிகவும் அன்போடு நேசிக்கப்பட்ட முதல் இந்திய தலைவராக அவர் விளங்கினார் என்று ரஜினி பாமிதத் குறிப்பிட்டிருந்தது கவனத்தில் கொள்ளத்தக்கது.

சக்லத்வாலா இந்தியாவில் வறுமையை ஒழிக்கவும், மக்களின் துயரங்களை போக்கவும் மத வழிப்பட்ட தீர்வைக் காண முயற்சித்தார். ஆனால் அதனால் பயனேதும் விளையாது என்று புரிந்து கொண்ட பின்பு அறிவியல் முன்னேற்றத்தால் இந்திய சமூகத்தை மாற்றிட முடியும் என்று நினைத்தார். அந்த சமயத்தில் பாம்பே குடிசைப் பகுதியில் பிளேக் நோய் பாதிப்பை சரிசெய்ய தீவிரமாக பணியாற்றினார். ஆயினும் அதுவும் பயனற்றதே என்று தனது அனுபவம் மூலம் தெரிந்து கொண்டார். அதையடுத்து தொழில் வளர்ச்சி மூலம் சமூகத்தை முன்னேற்ற முடியும் என்று அவர் எண்ணினார். அந்த சமயத்தில்தான் இந்தியாவில் டாடா இரும்பு மற்றும் உருக்கு தொழிற்சாலை நிறுவப்பட்டது. அப்போதும் கூட அவரது எண்ணம் நிறைவேறவில்லை. இந்த சமயத்தில் தான் அவர் அவரது குடும்பத்தாரால் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார். அங்கு கடைசியாக நேஷனல் லிபரல் கிளப் மூலம் ஆன்மீக நிகழ்வுகளில் பங்குபெறத் துவங்கினார்.  அதிலிருந்தே பின்னர் பிரிட்டிஷ் தொழிற்சங்க அரசியலுக்குள் நுழைந்தார். நேஷனல் லிபரல் கிளப்பில் பங்கேற்றிருந்தவர்களின் கபடத்தனமான, வெளிப்பூச்சுக்கு நன்றாக காட்டிக் கொள்ளும் நடவடிக்கைகளே அவர் அதிலிருந்து வெளியேறி தொழிற்சங்க அரசியலுக்குள் நுழைவதற்கு காரணமாக இருந்தது. தொழிற்சங்க அரசியலுக்குள் வந்த பின் தேசிய விடுதலை, தொழிலாளர் முன்னேற்றம், சோசலிச அரசியல் என்ற வழியில் பயணித்த அவர் கம்யூனிஸ்ட்டாக ஆனார்.

அவர் இங்கிலாந்து வந்த பின் அவரது குடும்பத்தினர்கள் நிரந்தர அங்கத்தினர்களாக இருந்த நேஷனல் லிபரல் கிளப் அவருக்கு இங்கிலாந்தின் ஒரு நல்ல அறிமுகத்தை தந்தது. அதனால் அவர்  இந்திய விடுதலைக்காக பாடுபடும் மக்கள் மத்தியில் ஒரு மரியாதைக்குரியவராகவும் அவர்களின் சிறந்த நண்பராகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டார். அந்த கிளப்பின் உறுப்பினரான லார்டு மார்லியின் இந்துக்கள், முஸ்லிம்களை தனி வாக்காளர்களாக ஆக்கும் திட்டமான இந்திய தேசிய இயக்கத்தை பிளவுபடுத்தி சீர்குலைக்கும் திட்டமான, மார்லி - மிண்டோ சீர்திருத்தம் 1909ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதை எதிர்த்து இங்கிலாந்தில் தனது வாதத்தை முன் வைத்தார். அதன்மூலம் நேஷனல் லிபரல் அமைப்பின் கபடத்தன்மையை அம்பலப்படுத்தி இந்திய மக்களின் நலன்கள் மீதான அக்கறையை வெளிப்படுத்தினார். இதை அவர் தீரமுடன் செய்தது பின்னர் அந்த அமைப்பிலிருந்து அவர் வெளியேறுவதற்கு காரணமாய் அமைந்தது. அதுவே 1910ஆம் ஆண்டு பிரிட்டிஷ் தொழிலாளர் வர்க்க அரசியல் வழியாக சுதந்திர லேபர் பார்ட்டியில் இணைவதற்கு இட்டுச் சென்றது.

இந்தியாவில் ஆட்சி செய்த பிரிட்டிஷாரை அவர்களது நாட்டிலேயே எதிர்த்து குரல் கொடுப்பதற்கான  சூழலை அவருக்கு ஏற்படுத்தியது. ஒரு முதலாளி குடும்பத்தில் பிறந்தவர் தொழிலாளர் நலன் சார்ந்த அரசியலுக்குள் வருவதற்கும் உலகின் வறுமையை ஒழிக்கும் தத்துவத்தை தேடுவதற்கும் கொண்டு சென்றது. 

சக்லத்வாலா இங்கிலாந்து நாடு முழுவதும் பயணம் செய்தார். அங்கு குடிசைப் பகுதிகளின் மோசமான நிலைமையையும், வேலையின்மையின் கொடுமையையும், தொழிற்துறை மற்றும் விவசாயத் துறைகளில் வேலைசெய்யும் தொழிலாளர்களை இரக்கமற்றுச் சுரண்டுவதையும் கண்டு உள்ளம் நொந்தார்.

வறுமை என்பது இந்திய நாட்டின் பிரச்சனை அல்ல, அது உலகளாவியது. எனவே உலகம் முழுவதும் உள்ள ஏழ்மையையும் வறுமையையும் ஒழிப்பதற்கான அரசியல் தத்துவம் சோசலிசமே என்பதை உணர்ந்து கொண்டார். சர்வதேச தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டியது, உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் தங்களது பிரச்சனைகளை தீர்ப்பதற்காக, வர்க்க சமுதாயத்தை மாற்றுவதற்கான சர்வதேச போராட்டத்தில் ஈடுபடுவதே இதற்கான தீர்வு என்றும் சோசலிசமே அதை கொண்டுவரும் என்றும் முடிவுக்கு வந்தார்.

இதன் விளைவாகவே அவர் பிரிட்டிஷ் தொழிலாளி வர்க்க நலன்களுக்காக உரக்கக் குரல்கொடுத்தார். தொழிலாளர்களின் அவலநிலையை போக்குவதற்காக முதலாளித்துவத்தையும் ஏகாதிபத்தியத்தையும் எதிர்ப்பது இன்றியமையாதது என்று தெளிவுகொண்டார். இதன் மூலம் பிரிட்டிஷ் அரசு காலனி நாடுகளாக ஆக்கிரமித்திருக்கும் இந்தியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஆதரவான நிலையை எடுத்தார். அந்த நாடுகளின் விடுதலைக்கும் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார்.

இந்தக் காலத்தில்தான் ரஷ்யாவில் லெனின் தலைமையிலான புரட்சி வெற்றிபெற்று தொழிலாளி வர்க்கம் ஆட்சிக்கு வந்தது. அந்த சமயத்தில் நடைபெற்ற முதல் உலகப்போரின்போது இங்கிலாந்து ரஷ்யா மீது தாக்குதலை தொடுத்ததை எதிர்த்து சக்லத்வாலா தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

ரஷ்ய கம்யூனிஸ்ட் அரசு பற்றி இங்கிலாந்தில் பரப்பப்பட்ட பொய்ச் செய்திகளையும் வதந்திகளையும் சோவியத் எதிர்ப்புப் பிரச்சாரத்தையும் முறியடிக்க அந்த நாடு பற்றிய உண்மை செய்திகளை வெளிப்படுத்துவதற்காக முனைந்து செயல்பட்டார். அதற்காக 1918ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த, மக்கள் ரஷ்ய தகவல் நிலையத்தில் இணைந்து ரஷ்ய புரட்சி பற்றிய செய்திகளை நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தார்.

 

;