tamilnadu

img

அநீதியான தொகுதி மறுசீரமைப்பை ஏற்க முடியாது!

அநீதியான தொகுதி மறுசீரமைப்பை ஏற்க முடியாது!

மக்கள் தொகை அடிப்படை யிலான நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பு நியாயமற்ற செயல், என்றும்; தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய இதுபோன்ற தொகுதி மறுசீரமைப்பை ஏற்க முடியாது என்றும், தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. மேலும், 1971-ஆம் ஆண்டின்  மக்கள் தொகை அடிப்படை யிலான நாடாளுமன்றத் தொகு திகள் ஒதுக்கீடு, மேலும் 30  ஆண்டுகளுக்கு நீட்டிக்கப் படும் என்பதற்கு பிரதமர் நாடாளு மன்றத்தில் உறுதியளிக்க வேண்டும்; மேலும் இதனை உறுதிசெய்ய அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டு உள்ளது.

தென்மாநிலங்களுக்கு  எதிராக பாஜக சூழ்ச்சி

நாடாளுமன்றத் தேர்தல்க ளின் போது, தென் மாநிலங்களில் பெரிதாக வெற்றிபெற முடியாத பாஜக, நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களின் பிரதிநிதித் துவத்தை குறைக்கும் விதமாக, மக்கள் தொகை அடிப்படை யிலான தொகுதி மறுசீரமைப்பு என்ற சூழ்ச்சித் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.  அதாவது, உத்தரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் தொகை அதிகமாக உள்ளது என்பதைக் காரணமாக காட்டி, அதற்கேற்ப, நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்துவது, மறுபுறத்தில் அதே மக்கள் தொகையையே காரணமாகக் காட்டி தமிழ்நாடு, கேரளம் போன்ற மாநிலங்களில் நாடாளு மன்றத் தொகுதிகளைக் குறைப்பது என்று திட்டமிட்டு வருகிறது.

தமிழக அரசு  முன்னெச்சரிக்கை

எனவே, பாஜகவின் தொகுதி குறைப்பு சூழ்ச்சியை முறி யடிக்கவும், நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் அரசியல் பிரதி நிதித்துவதை உறுதி செய்யவும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டா லின் அனைத்துக் கட்சிக் கூட்டத் திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.  இந்தக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் 2 பிரதிநிதிகளும் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் ஒரு பிரதிநிதியும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது. அதன்படி சென்னை தலைமைச் செயலகத்தில், புதன் கிழமையன்று காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடை பெற்றது. மொத்தம் 63 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், 58 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 56 அரசியல் கட்சிகள் பங்கேற்பு

திமுக சார்பில் ஆர்.எஸ். பாரதி, வில்சன், அதிமுக சார்பில் ஜெயக்குமார், இன்பதுரை, காங்கிரஸ் சார்பில் செல்வப் பெருந்தகை, ராஜேஷ்குமார், மதிமுக சார்பில் வைகோ, துரை.  வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் சார்பில் பெ. சண்முகம், ஆர்.சச்சிதானந்தம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இரா. முத்தரசன், பெரியசாமி, விசிக சார்பில் தொல். திருமா வளவன் எம்.பி., து. ரவிக்குமார் எம்.பி., பாமக சார்பில் அன்பு மணி ராமதாஸ், ஜி.கே. மணி,  மநீம சார்பில் கமல்ஹாசன், தவாக சார்பில் தி. வேல்முருகன், தவெக சார்பில் புஸ்ஸி ஆனந்த், தேமுதிக சார்பில் பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  பாஜக, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, நாதக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய 5 கட்சிகள்  கூட்டத்தில் கலந்து கொள்ள வில்லை.

விரிவாக விளக்கிய முதலமைச்சர்

இந்தக் கூட்டத்தில், தொகுதி மறுவரையறையின் பின்னுள்ள ஆபத்து மற்றும் தமிழ்நாட்டின் உரிமைகள் பறிப்பை, பாதிப்புகளை பவர் பாய்ண்ட் மூலம் விரிவாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் ஆகியோர் எடுத்துரைத்தனர்.  அனைத்து கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்படுவதற்கான தீர்மானத்தையும் முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் முன்மொழிந்தார்.  

கூட்டாட்சிக்கு எதிரானது

“இந்திய நாட்டின் கூட்டாட்சி  அமைப்பிற்கும், தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநி லங்களின் அரசியல் பிரதிநிதித் துவ உரிமைக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதி மறுசீர மைப்பை இந்த அனைத்து கட்சிக் கூட்டம் ஒரு மனதாகக் கடுமையாக எதிர்க்கிறது. நாட்டின் நலனுக்காக மக்கள் தொகை கட்டுப்பாட்டை முனைப் பாக செயல்படுத்திய ஒரே கார ணத்திற்காக தமிழ்நாடு உள்ளி ட்ட தென் மாநிலங்களின் நாடாளு மன்ற பிரதிநிதித்துவம் குறைக்கப் படுவது நியாயமற்றது.

30 ஆண்டுக்கு மாற்றக்கூடாது

மக்கள்தொகை கட்டுப் பாட்டை அனைத்து மாநிலங் களும் ஊக்குவிக்கும் வகையில் 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்ற தொகுதி வரையறை செய்யப்படும் என்று கடந்த 2000-ஆம் ஆண்டின் அன்றைய பிரதமர் உறுதி யளித்தவாறு, தற்போதும் இந்த வரை யறை 2026-லிருந்து அடுத்த 30 ஆண்டு கள் நீட்டிக்கப்படும் என நாடாளு மன்றத்தில் பிரதமர் உறுதி அளிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் உறுப்பினர் களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில் 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில், தற்போது  நாடாளுமன்றத்தின் இரு அவைகளி லும் (மக்களவை - மாநிலங்களவை) மாநிலங்களுக்கு இடையே எந்த விகிதத்தில் தொகுதி எண்ணிக்கைகள் உள்ளதோ, அதே விகிதத்தில் தென் மாநிலங்களின் தொகுதிகளை உயர்த்த அரசியல் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது. தொகுதி மறுசீரமைப்பு காரணமாக, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற் போதைய பிரதிநிதித்துவ சதவிகிதம் 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் ஒன்றிய அரசு மாற்றம் செய்யக் கூடாது என்று இக்கூட்டம் வலியுறுத்து கிறது.

தென்மாநிலங்களைத் தண்டிப்பதா?

மேலும், தொகுதி மறுசீரமைப்புக் குத் தமிழ்நாடு எதிரானதாக இல்லை.  அதே சமயத்தில் கடந்த 50 ஆண்டு களாக சமூக- பொருளாதார நலத்திட்டங் களைச் சிறப்பாக செயல்படுத்தி யதற்கான தண்டனையாகத் தொகுதி மறுசீரமைப்பு அமைந்துவிடக் கூடாது என்று அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டின் குறைந்தபட்ச கோரிக்கைகளாக அனைத்துக் கட்சி  கூட்டம் முன் வைக்கிறது. கோரிக்கை களையும், அவை சார்ந்த போராட்டங் களை முன்னெடுத்துச் செல்லவும், மக்கள் மத்தியில் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட வும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சி களின் பிரதிநிதிகள் அடங்கிய “கூட்டு நடவடிக்கைக் குழு” ஒன்றை அமைத்திடவும், அதற்கான முறை யான அழைப்பை மேற்படி கட்சி களுக்கு அனுப்பி வைக்கவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது,” என தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.

தலைவர்கள் ஆதரவு

இந்த தீர்மானம் மீது அனைத்துக் கட்சித் தலைவர்கள் தங்களின் கருத்தை தெரிவித்தனர்.  தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு பாதிக்கப்படக்கூடாது. தமிழக அரசின் தீர்மானத்தை முழுமை யாக அதிமுக ஆதரிக்கிறது என்றார்  முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார். ‘தொகுதி மறுசீரமைப்பு ஒரு கட்சி யின் பிரச்சனை அல்ல. மாநிலத்தின் பிரச்சனை’ என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்தார். ‘தென் மாநில எம்.பி.க்கள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழுவை விசிக வரவேற்கிறது. தற்பொழுதுள்ள தொகுதி எண்ணிக்கையை மாற்ற வேண்டாம் என வலியுறுத்துவோம் என வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் கூறினார். ‘இந்த கூட்டம் அவசியமானது; காரணம் தமிழகத்திற்கு தொகுதிகள் குறையாது என தெரிவித்துள்ள அமித்ஷா, உத்தரப்பிரதேசத்திற்கு எவ்வளவு தொகுதிகள் அதிகரிக்கும் என சொல்லவில்லை’ என பாமக-வின் அன்புமணி தெரிவித்தார். ‘கொள்கை முரண்களை ஒதுக்கி விட்டு தமிழ்நாட்டின் எதிர்காலத்திற் காக கூடியிருக்கிறோம். கலந்து கொண்டுள்ள கட்சிகளுக்கு பாராட்டுகள். இந்தியாவை ஹிந்தியாவாக மாற்றாதீர்கள்’ என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குறிப்பிட்டார். தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாடு அரசு மிகச் சிறப்பான கூட்டத்தில் கூட்டியுள்ளது. மாநில அரசின் தீர்மானத்தை முழுமை யாக ஆதரிக்கிறது என்றது தேமுதிக. ‘தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் மாநிலங்களின் உச்சி மாநாட்டை முதலமைச்சர் நடத்த வேண்டும். ஒருநாள் பொது வேலை நிறுத்தத்தை ஏற்பாடு செய்ய வேண்டும்’ என மஜக தலைவர் தமிமுன் அன்சாரி கூறினார். ‘முதலமைச்சரின் கோரிக்கை களை முழுமையாக ஏற்று உங்களு டன் இணைந்து போராடுவோம்’ என தமமுக தலைவர் ஜான் பாண்டியன் கூறினார். தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக இந்தியாவிலேயே முதன் முறையாக திமுக தலைமையிலான அரசு குரல் கொடுத்திருக்கிறது. ‘ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களும், அர சியல் கட்சிகளும் அரசுக்கு ஆதரவாக திரண்டுள்ளனர். அரசு எந்த முடிவு எடுத்தாலும் எங்கள் ஆதரவு உண்டு’ என கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ. தனியரசு தெரிவித்தார். ‘தென்னிந்தியாவில் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் மறு சீரமைப்பு நியாயமாக இருக்காது. தொகுதி மறுசீரமைப்பு தேவை யற்றது. தற்பொழுது எண்ணிக்கையே தொடர வேண்டும்’ என தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் கூறினார். தமிழ்நாடு தொகுதி வரை யறைக்கு எதிராக இல்லை; தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலமும் பாதிப்படை யாமல் மறுவரையறையை நேர்மை யாக, வெளிப்படையாகச் செய்ய வேண்டும்’ என நிதியமைச்சர் தங்கம்  தென்னரசு கூறினார்.

தீர்மானம் நிறைவேற்றம்

அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற கட்சித் தலைவர்கள் அனை வரும், நாடாளுமன்றத் தொகுதிக் குறைப்புக்கு எதிரான தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு துணை யிருப்போம் என்றும் கூறியதுடன், தமிழக அரசின் தீர்மானத்தை வர வேற்று ஆதரவு தெரிவித்தனர். இதை யடுத்து முதல்வர் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக நிறை வேறியது.